;
Athirady Tamil News

டெங்கு பரவலை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை ; 14 மாவட்டங்களுக்கு அமைச்சர் உத்தரவு

0

நாடெங்கும் வேகமாக பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (15) முற்பகல் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் போது, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வைத்தியசாலைகளின் தயார்நிலை, நுளம்பு ஒழிப்பு களப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நடைமுறைச் சவால்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உள்ளூராட்சி மன்றங்கள், பாதுகாப்புப் படைகள், அரச நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் செயற்பாட்டுப் பங்களிப்பின் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வரும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பதுளை உள்ளிட்ட 14 மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக அழைத்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

இன்று (15) முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

டெங்கு நோயை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய திட்டங்கள் மற்றும் செயற்பாட்டு வேலைத்திட்டங்களை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

மேலும், நோய் தடுப்பு, அறிகுறிகள் மற்றும் சிகிச்சை சேவைகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் அவசர ஊடக வேலைத்திட்டம் ஒன்றையும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் அவசர மற்றும் முன்னுரிமை பணிகளாகக் கருதப்பட்டு, தொடர்ச்சியாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியதுடன், அதற்கான பொறுப்புகள் உரிய பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.