மோதல் முடிவுக்கு வருகிறதா…? அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்கா, ஈரான் அறிவிப்பு
வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதேவேளை, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியது. இதனால் ஈரானுக்கு சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வது பாதிக்கப்பட்டது.
இதனிடையே, அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
அமைதி ஒப்பந்தம்
இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்கா, ஈரான் அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, ஈரான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, துருக்கி உள்பட பல்வேறு நாடுகளின் முயற்சியால் ஈரான் , அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அமைதி ஒப்பந்தப்படி இரு நாடுகளும் மோதலை நிரந்தரமாக கைவிட வேண்டும். ஈரான் துறைமுகங்களை முடக்கியுள்ள அமெரிக்க படைகள் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும்.
ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும். இது கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர வழிவகுக்கும். இந்த அமைதி ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை (19ம் தேதி) சுவிட்சர்லாந்தில் வைத்து அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளது.
இந்த ஒப்பந்தப்படி, அனைத்து தரப்பும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களில் ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் அனைத்தும் இரு தரப்பும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீதான தாக்குதலையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அமைதி பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பங்கேற்காத நிலையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்துமா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.