;
Athirady Tamil News

ரஷ்ய எண்ணெய்க் கப்பல் சிறைப்பிடித்த பிரிட்டன்

0

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷ்ய எண்ணெய்க் கப்பல் ஒன்றை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கையில் பிரிட்டன் முதல்முறையாக ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் போரையடுத்து ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு பல்வேறு சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும், அந்தத் தடைகளை மீறுவதற்காக உரிமையாளர்கள் மற்றும் சரக்கு விபரங்களை மறைத்து செயல்படும் ‘நிழல் கப்பல்’ (Shadow Fleet) வலையமைப்பை ரஷியா பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, சுமார் 600 ரஷ்ய கப்பல்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.

இந்தத் தடையின் மூலம், குறித்த கப்பல்கள் பிரிட்டன் துறைமுகங்களுக்குள் நுழைவதும், அவற்றுக்கு நிதி, காப்பீடு மற்றும் தரகு சேவைகள் வழங்கப்படுவதும் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘ஸ்மிர்டோஸ்’ (Smirdos) என அழைக்கப்படும் ரஷ்ய எண்ணெய்க் கப்பல் ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டிய ஆங்கிலக் கால்வாயில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பிரிட்டன் ஆயுதப் படைகளால் இடைமறிக்கப்பட்டது.

சுமார் ஆறு மணி நேரம் நீடித்த இந்த நடவடிக்கையின் பின்னர், குறித்த கப்பல் பிரிட்டனின் தென் கடலோரப் பகுதிக்கு அருகில் தடுத்து நிறுத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், “ஸ்மிர்டோஸ் கப்பலை சிறைபிடித்த நடவடிக்கை ரஷியாவுக்கு மேலும் ஒரு பலத்த அடியாகும்.

உக்ரைனுக்கு எதிரான போருக்கு ஆதரவளிப்பவர்கள் எங்கும் ஒளிந்துகொள்ள முடியாது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் எண்ணெய் வருவாயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, உக்ரைன் போருடன் தொடர்புடைய சர்வதேச அழுத்தங்களை மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.