;
Athirady Tamil News

சனத்தொகை கட்டுப்பாடு யோசனையை நிராகரித்த சுவிஸ் மக்கள்

0

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்துவதற்கான யோசனையை அந்நாட்டு வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக ஆரம்பக்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன. அனைத்து வாக்குகளும் இன்னும் எண்ணி முடிக்கப்படாத போதிலும், தற்போதைய நிலவரப்படி 55% பேர் இந்த முன்மொழிவுக்கு எதிராகவும், 45% பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

வலதுசாரி கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியினால்​, இந்த யோசனை கொண்டு வரப்பட்டது. இக்கட்சி நீண்டகாலமாக குடியேற்றவாசிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் ஒரு அமைப்பாகும்.

இந்தக் கடுமையான விவாதம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுவிட்சர்லாந்தின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான உடன்படிக்கையை ஆபத்தில் ஆழ்த்தும் அபாயத்தைக் கொண்டிருந்தது.

2002ஆம் ஆண்டில் 7.3 மில்லியனாக இருந்த சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை, தற்போது 9.1 மில்லியனாக வேகமாக உயர்ந்துள்ளது. இதில் 27% பேர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள் ஆவர்.

இருப்பினும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் மீதான அழுத்தத்தைக் குறைக்கலாம் என்ற மக்கள் கட்சியின் வாதம், போதிய அளவிலான வாக்காளர்களைக் கவரவில்லை எனத் தோன்றுகிறது.

பொதுச் சேவைகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவே இந்த மக்கள் தொகைக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாக சுவிஸ் மக்கள் கட்சி வலியுறுத்திய போதிலும், சமூகப் பிரச்சினைகளுக்கு புகலிடம் கோருவோர் மற்றும் சிறுபான்மையினரே காரணம் என அவர்கள் மீது குற்றஞ்சாட்டி, குடியேற்றவாசிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்ட நீண்டகால வரலாறு இக்கட்சிக்கு உண்டு.

ஆனால், சுவிஸ் வர்த்தகத் தலைவர்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினர், ஐரோப்பாவின் ஒற்றைச் சந்தைக்கான சுவிட்சர்லாந்தின் முக்கிய அணுகலை இழக்க நேரிடும் என அஞ்சினர். சுவிட்சர்லாந்தின் மொத்த உற்பத்திகளில் பாதியளவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கே விற்கப்படுகின்றன.

ஆனால், இந்த சந்தை அணுகலானது ஐரோப்பிய மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான சுவிட்சர்லாந்தின் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது. ஒருவேளை இந்த மக்கள் தொகைக் கட்டுப்பாடு அங்கீகரிக்கப்பட்டிருந்தால், சுவிட்சர்லாந்து அந்த உடன்படிக்கையை ரத்து செய்ய வேண்டியிருந்திருக்கும்.

மேலும், மிகவும் நிலையற்றதாக இருக்கும் தற்போதைய உலகச் சூழலில், இத்தகையதொரு நடவடிக்கை தங்கள் நாட்டைத் தனிமைப்படுத்திவிடும் என்ற அச்சமும் சில சுவிஸ் வாக்காளர்களிடம் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

சுவிட்சர்லாந்து ஒரு நடுநிலை நாடாக இருந்தபோதிலும், அதன் அண்டை ஐரோப்பிய நாடுகளைப் போலவே பாதுகாப்புக்காக அதிக நிதி செலவழிப்பதுடன், பாதுகாப்புத் துறையில் ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமாகச் செயல்படுவதற்கான வழிகளையும் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.