;
Athirady Tamil News

உலகளவில் புற்றுநோய்க்கு தினமும் 27 ஆயிரம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

0

சுவிட்சர்லாந்து,

உலகளவில் புற்றுநோய் பாதிப்பு 2050-ம் ஆண்டில் 3 1/2 கோடி என்ற எண்ணிக்கையில் இருக்கும் எனவும், புற்றுநோயால் தினமும் 27 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள் எனவும் உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

புற்றுநோய் பாதிப்பு
உலகளவில் மனித உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் நோய்களில் புற்றுநோய் முதன்மையானதாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய மருத்துவ ஆய்வுகளின்படி, கடந்த சில ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரிடையே இந்த பாதிப்பு அதிகரித்து வருவது மருத்துவ உலகை கவலைகொள்ள செய்திருக்கிறது.

மனித குலத்திற்கு பெரும் சவால்
நவீன வாழ்வியல் மாற்றம், மாறிப்போன உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை மனித குலத்திற்கு பரிசாகத் தந்துள்ள ஒரு பெரும் சவால்தான் இந்த புற்றுநோய். ஒரு காலத்தில் பரம்பரை நோய் என்றும், வயதானவர்களை மட்டுமே தாக்கும் என்றும் கருதப்பட்ட இந்த நோய், இன்று நம் வீட்டு வாசலிலும் வந்து நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக உலக சுகாதார அமைப்பும் (W.H.O.) ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.

தினமும் 27 ஆயிரம் பேர் உயிரிழப்பு
உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவான சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (I.A.R.C.) மற்றும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து “புற்றுநோய் குறித்த உலகளாவிய நிலை அறிக்கை 2026”-ஐ சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. அதில் தற்போதைய நிலவரப்படி 2.06 கோடி புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருகிறது. இந்த புற்றுநோய் பாதிப்பு தாக்கத்தால் ஆண்டுக்கு சுமார் 1 கோடி மக்கள் உயிரிழக்கின்றனர். அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 27 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்த கால் நூற்றாண்டுகளில் அதாவது 2050-ம் ஆண்டுக்குள் புற்றுநோய் பாதிப்பு சதவீதம் சுமார் 67 முதல் 77 சதவீதம் வரை அதிகரிக்கும். இதன் மூலம் ஆண்டு பாதிப்பு 3.50 கோடியைத் தொடும் என சொல்லப்பட்டுள்ளது. உலகளாவிய மொத்த புற்றுநோய் பாதிப்புகளில் 50.7 சதவீத பாதிப்புகளும், ஒட்டுமொத்த புற்றுநோய் மரணங்களில் 56.5 சதவீத மரணங்களும் ஆசிய கண்டத்தில் மட்டுமே பதிவாகின்றன.

காரணம் என்ன?
புகையிலை பயன்பாடு, மதுப்பழக்கம், உடல் பருமன் மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாத சோர்வான வாழ்க்கை முறை புற்றுநோய் பாதிப்புக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. காற்றில் கலந்துள்ள கடுமையான காற்று மாசுபாடு மற்றும் சில வகையான நாள்பட்ட தொற்றுநோய்களும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 45 சதவீதத்துக்கும் அதிகமானோர் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். அதிக வருவாய் கொண்ட வளர்ந்த நாடுகளில் புற்றுநோய் பாதித்தவர்களின் 5 ஆண்டுகள் உயிர்பிழைக்கும் சதவீதம் 85 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. ஆனால், குறைந்த வருவாய் கொண்ட ஏழை நாடுகளில் இந்த சதவீதம் 30 சதவீதத்துக்கும் கீழ் சரிந்துள்ளது.

முக்கியத்துவம் தரவேண்டும்
உலக நாடுகளில் வெறும் 28 சதவீதம் நாடுகள் மட்டுமே தங்களின் அடிப்படை மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் புற்றுநோய் சிகிச்சைக்கான செலவுகளை முழுமையாக உள்ளடக்கியுள்ளன. புற்றுநோய் பாதிப்புகளில் 10-ல் 4 பாதிப்புகள், அதாவது, சுமார் 40 சதவீதம் முற்றிலும் தவிர்க்கப்படக்கூடிய காரணிகளால்தான் ஏற்படுகின்றன. எனவே ஆரம்பக்கட்ட கண்டறிதல், தடுப்பூசிகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நாடுகள் முக்கியத்துவம் தரவேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

உலகளாவிய தற்போதைய நிலை
ஆண்டுக்கு 2.06 கோடி புதிய பாதிப்புகள்.

தினமும் 27 ஆயிரம் பேர் உயிரிழப்பு. (ஆண்டுக்கு 1 கோடி பேர்).

ஆசியாவில் மட்டும் 50.7 சதவீத பாதிப்புகள், 56.5 சதவீத மரணங்கள்.

நிதி நெருக்கடியில் 45 சதவீத நோயாளிகள்.

28 சதவீத நாடுகளிலேயே காப்பீட்டு வசதி.

2050-ல் ஆண்டு பாதிப்பு 3 1/2 கோடியாக உயரும் (அதாவது சுமார் 67 முதல் 77 சதவீதம் வரை அதிகரிக்கும்).

காரணங்கள்
புகையிலை மற்றும் மதுப்பழக்கம்.

மாறிப்போன உணவுப் பழக்கவழக்கங்கள்.

போதிய உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை.

கடுமையான காற்று மாசுபாடு.

நாள்பட்ட சில தொற்றுநோய்கள்.

நவீன வாழ்வியல் மாற்றங்கள்.

தடுப்பு நடவடிக்கைகள்
ஆரம்பக்கட்ட கண்டறிதல், பரிசோதனைகள் செய்தல்.

தகுந்த தடுப்பூசிகளைப் போடுதல்.

ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றுதல்.

புகையிலை, மதுப்பழக்கங்களை தவிர்த்தல்.

சத்தான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளுதல்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.