உக்ரைனில் பஸ் மீது ரஷியா தாக்குதல்; 33 பேர் பலி
கீவ்
உக்ரைனில் பஸ் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதில் 33 பேர் பலியாகி உள்ளனர்.
உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 4-வது ஆண்டாக தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது. போரால் வீரர்கள் உள்பட இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர்.
மத்தியஸ்த பேச்சுவார்த்தை
போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன், டிரம்ப் பேசினார். எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை.
இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போரானது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் கிழக்கே கிரமடோர்ஸ்க் நகரில் பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. அதன் மீது ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இதில், 33 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான புகைப்படங்களை காவல் துறை வெளியிட்டுள்ளது.
பேருந்து நிறுத்தம்
இந்த தாக்குதல் நடந்தபோது அப்பகுதியில் இரண்டு பேருந்துகள் இயங்கிக்கொண்டிருந்தன. இந்த ஆண்டில் ரஷியா தரப்பில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இது கூறப்படுகிறது. அது ஒரு பேருந்து நிறுத்தம் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
இதுபற்றி கவர்னர் வாடிம் பிளாஷ்கின் கூறும்போது, ஒரே தாக்குதலில் அதிகளவிலான மக்களை கொல்ல முடியும் என்பதற்காக இதுபோன்று பயணிகளுடன் செல்லும் பேருந்து அவர்களுக்கான இலக்காக அமைந்து விடுகிறது என்றார்.