;
Athirady Tamil News

வன்னி மாவட்டத்தில் குடியேற்றும் நோக்கில் கீழ் மல்வத்து ஓயா திட்டம் முன்னெடுக்கப்படவில்லை : பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க

0

ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த மக்களை வன்னி மாவட்டத்தில் குடியேற்றும் நோக்கில் கீழ் மல்வத்து ஓயா பன்முக அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என கூட்டுறவு துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

கிராமிய அபிவிருத்தி மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘‘கீழ் மல்வத்து ஓயா பன்முக அபிவிருத்தி திட்டம்‘‘ தொடர்பில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும், ஏனைய பிரதேச மக்களைக் குடியேற்றும் திட்டமாகவே இது காணப்படுவதாகவும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரூபா 47.18 பில்லியன் மதிப்பீட்டில் செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண்பதுடன், தந்திரிமலை பகுதியில் புதிய அபிவிருத்தி மண்டலமொன்றை உருவாக்குதல், மன்னார் மாவட்டத்தின் யோத குளம் மற்றும் அகத்திமுப்பு குளத்தின் கீழ் 30,690 ஏக்கர் நெற்பயிரச்செய்கை நிலங்களின் பயன்பாட்டுச் செறிவை அதிகரித்தல் மற்றும் நீர்மின் உற்பத்தி என்பன இதன் முக்கிய நோக்கங்களாகும். இத்திட்டத்தின் முதற்கட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டில் ரூபா 5,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

கீழ் மல்வத்து ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் மாற்று காணிகள் வழங்குவது குறித்தும், அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் வன்னி மக்களுக்கு இது குறித்து சில தவறான புரிதல்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கருத்திற் கொண்டே இத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும், ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த மக்களை வன்னி மாவட்டத்தில் குடியேற்றும் நோக்கில் இது முன்னெடுக்கப்படவில்லை என்றும், எனவே அச்ச சந்தேகங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன், காதர் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், ப. சத்தியலிங்கம், கீழ் மல்வத்து ஓயா பன்முக அபிவிருத்தி திட்டத்தின் பணிப்பாளர் அனுர நெலுகொல்ல, வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர மற்றும் திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.