காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 8 பேர் பலி!
காஸா மீது இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஸாவை நிர்வாகம் செய்யும் ஹமாஸ் அமைப்பின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கான் யூனிஸ் பகுதியில் 5 பேரும், காஸா நகரில் 3 பேரும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.
பலியானோரின் உடல்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், காயமடைந்த நிலையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கான் யூனிஸ் பகுதியில் காவல்துறை அதிகாரிகளைக் குறிவைத்து இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக காஸா உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், தெற்கு மற்றும் வடக்கு காஸாவில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தனியார் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளது. தாக்குல்களின் விளைவுகள் பற்றி ஆராய்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இஸ்ரேல் மீது அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின், காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் அங்கு பெரும்பகுதி சிதைந்துள்ளது.
காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள தரவுகளின்படி, அங்கு இதுவரை 74,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் புள்ளிவிவரங்களை ஐ.நா. சபை நம்பகமானதாகக் கருதுகிறது.
அக்டோபர் 2025-ல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த போதும், அதன் பின்னர் இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸாவில் 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.