;
Athirady Tamil News

பாக்கு நீரிணையை சீன நீரிணையாக்க துடிக்கும் சீனத் தூதர் : கேள்விக் கணையால் துளைத்த யாழ் புத்திஜீவிகள்

0

தோற்கடிக்கப்பட்டவனை தோல்வியில் இருந்து மீளவிடாமல், தோல்வி அடைந்தமைக்கான காரணங்களை கண்டறியாமல் தொடர்ந்து குழப்பகரமான தோல்வி மனநிலையில் வைத்திருப்பதுதான் வெற்றியாளனின் தந்திரம்.

இந்த அடிப்படையிற்தான் ஈழத் தமிழினத்தை தொடர்ந்து குழப்பகரமான நிலையிலும், கையேந்தும் நிலையிலும் வைத்திருக்கவே சிங்கள தேசம் முற்படுகின்றது.

யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சீன அரசுடன் இணைந்து அபிவிருத்தி என்ற மாயமானை காட்டி, தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொதியை வழங்கி, மக்களை தொடர்ந்தும் அந்நியரிடம் கையேந்தும் நிலையில் வைத்திருக்க விரும்புகின்றது.

சீன அரசு தர்மம் செய்கின்ற அளவுக்கு ஒரு தயாள குணம் படைத்ததா? அல்லது தமிழ் மக்கள் மீது இவ்வளவு மனித நேயம் கொண்டவர்களா? மனிதநேயம் கொண்ட ஏதாவது ஒரு அரசு இந்த உலகில் நிலை பெற்றிருக்கிறதா என்றால் இல்லவே இல்லை.

அரசுகள் மனிதநேயம், தயவுதாட்சனை அற்றவை. அவைகள் மக்களை அடக்குகின்ற ஒடுக்குமுறை இயந்திரமாகவே தொழிற்படும். அந்த ஒடுக்குமுறை என்பது அந்த ஒவ்வொரு அரசினுடைய நலன் சார்ந்துமே தொழிற்படும்.

இந்த உலகில் நலன்கள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. நலன்கள் இல்லையேல் உறவுகள் கிடையவே கிடையாது. இந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் விஜயம் செய்திருந்தார்.

அவரை தொடர்ந்து சீனாவின் தூதுவரும் வடக்கிற்கு சென்றிருந்தார். இந்தியாவின் நிதி அமைச்சர் கொழும்பில் தரையிறங்கினர். அங்கிருந்து மலையகம் சென்று 200 வது ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு அங்கிருந்து கிழக்கு மாகாணம் சென்றார்.

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள்
கிழக்கில் இருந்து யாழ்ப்பாணம் சென்று யாழ்ப்பாணத்தில் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இவ்வாறு அவருடைய பயணத்தின் வழிப்பாதை ஒழுங்கு என்பது ராஜரிக ரீதியில் பொருள்கொண்டதாகவே பார்க்கப்பட வேண்டும்.

அது பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். ஆனால் சீனத்தூதரின் விஜயம்தான் இந்தப் பந்தியில் முக்கியத்துவம் பெறுகிறது. அவருடைய பயணத்தின் நோக்கங்கள் வித்தியாசமானவை. யாழ்ப்பாணத்தின் கல்விமான்களையும், புத்திஜீவிகளையும், ஊடகவியலாளர்களையும், சமூகப் பிரதிநிதிகளையும்.மதத் தலைவர்களையும் சந்தித்தார். அது மட்டும் அல்ல யாழ்ப்பாணத்தின் சுதேச அரசின் சின்னமாக விளங்குகின்ற நல்லுார் மந்திரிமினையையும் யாழ் பழைய பூங்கா கட்டடத் தொகுதியையும் பார்வையிட்டார்.

அத்தோடு யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதிக்கு விஜயம் செய்து பல சமூக பிரிவுகளுடன் கலந்துரையாடினார். நெடுந்தீவுக்கு சென்று அங்கு 400 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கினார். பருத்தித்துறை முனைக்குச் சென்று பின்னர் மன்னருக்கும் பூநகரி பகுதிக்கும் சென்றிருந்தார்.

இந்தப் பயணங்களின் போது மக்களையும் பொது அமைப்புகளையும் சந்திப்பதற்கான வழிவகைகளை அரசு சார்பு தமிழ் அரசியல் கட்சி ஒன்று பின்னால் இருந்து வேலை செய்ததை பார்க்க முடிந்தது. இந்த பயணங்கள் அனைத்திலும் எதிர்கால வடமாகாணத்தினுடைய தேர்தலும் வடமாகாணத்தில் சீனாவின் முதலீடுகளும், சீனாவின் இருப்பையும் உறுதிப்படுத்துவதும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான மூலோாயங்களே அதிக முதன்மை பெற்றிருந்ததை கானமுடிகிறது.

இவை எதிர்காலத்தில் வடமாகாரத்தின் எத்தகைய தாக்கத்தை செலுத்தும் என்பதே இங்கு முக்கியமானது. வட மாகாணத்தில் சீன தூதுவரின் பயணத்தில் அவர் சென்ற இடங்கள் அனைத்தும் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். மன்னாரின் பேசாலை தொடக்கம் தீவுப் பகுதி, மன்னார் , யாழ்ப்பாணத்தின் மத்திய பகுதி மற்றும் பருத்துத்துறை ஆகிய இடங்களின் பயணம் என்பது பாக்கு நீரினை அரசியலை மையப்படுத்தியதாகவே பார்க்கப்பட வேண்டும்.

கடந்த வாரம் சீன தூதரின் வருகை பற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. பின்னர் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் பேசப்பட்டது. ஆனால் இந்தியாவின் நிதி அமைச்சரின் வருகையை அடுத்து சீன தூதரின் வருகை மிக வேகமாக ஒழுங்குபடுத்தப்பட்டதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியா வட- கிழக்கில் மேற்கொள்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாற்றிடாகவும் அதை மேவிச் செயற்படக்கூடிய அளவிலும் சீனாவின் செயற்பாடுகள் வடகிழக்கில் அமைந்துள்ளன. குறிப்பாக சொன்னால் இந்திய-சீனப் போட்டி ஒன்று இலங்கை தீவில் வடகிழக்கில் இப்போது ஆரம்பித்துவிட்டது என்றுதான் சொல்லலாம்.

இந்த விடயத்தில் தமிழ் மக்களும் தமிழ் அறிவுஜீவிகளும் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என வரலாறு எச்சரிக்கிறது. செஞ்சீனாவினால் வட-கிழக்கு தமிழர் தாயகத்தில் மேற்கொள்கின்ற முதலீடுகளும் கடல்வள அவிருத்தி, ஆய்வுகள் என்பன ஈழத் தமிழ் மக்களை தொடர்ந்தும் அரசுகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சேவகர்களாக, கூலித்தொழிலாளியாக அமர்த்துவதையே நோக்காகக் கொண்டிருகிறது. இப்போது கடல்வள நீரியல் சட்ட விதிகள் இலங்கை அரசினால் திருத்தப்படுகின்றன.

அபாயகரமான ஒரு சூழல்
அதனூடாக புதியதொரு சட்டமூலத்தின் மூலம் தாயக கடற்பரப்பு அந்நியர்களின் மீன்பிடிக்கு அனுமதியை இலங்கை அரசால் வழங்கப்பட போகிறது. தமிழர் தாயகத்தின் பிரதான இயற்கை வளம் என்பது அதனுடைய கடல் வளம்தான். இந்தக் கடல் வளத்தை ஆண்டு அனுபவிக்கும் உரிமை தமிழ் மக்களுக்கே உரித்தானது.

இந்தக் கடல் வளத்தை அந்நிய சக்திகளைக் கொண்டு சூறையாடுவதன் மூலம் தமிழ் மக்களை தொடர்ந்தும் கையேந்தி நிலையில் வைத்திருக்க முடியும். அந்த அடிப்படையிற்தான் இப்போது இலங்கையின் வட கிழக்கு கடக்க கடற் பரப்பில் அன்னிய மீன் பிடிக் கப்பல்கள் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 40 ஆண்டு காலம் தொடர் யுத்தத்தினால் நலிவடைந்திருக்கும் தமிழ் கடற்றொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெரிதும் இழந்துள்ளனர்.

இன்றைய மாறிவரும் உலகின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தம் தொழில் சார்ந்து தொழில்நுட்ப வளர்ச்சி அடையாத மக்கள் கூட்டமாக ஈழத் தமிழ் கரையோர கடற்றொழில் சமூகம் பின்தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அவர்களுடைய தொழில் வாய்ப்புகளை விருத்தி செய்து அவர்களை ஒரு உயர் தொழில்நுட்ப மீன்பிடி கைத்தொழிலில் ஈடுபடுத்துவதற்கு பதிலாக அவர்களை சிறு மீன்பிடி படங்களுடனும் கார்ப்பரேட் நிறுவனங்களினுடைய தொழிலாளர்களாக மாற்றுவதனையே சீனாவுடைய தொழில் முதலீடுகள் நோக்காகக் கொண்டிருக்கின்றன.

தமிழர் தேசத்தின் கடல் வளத்தை சூறையாடுவதற்கான அனைத்து அடிக்கட்டுமான நடவடிக்கைகளும் தமிழ் கடற்றொழிலாளர்களை அணைத்து அரசியல், சட்டவியல் ரீதியான நடவடிக்கைகளும் சாதுரியமாக இப்போது முன்னெடுக்கப்படுகிறது. இதன் ஒரு அங்கம் தான் கடற்றொழிலாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குதல், தொழில் உபகரணங்களை வழங்குதல் என்ற போர்வையில் கடற்றொழிலாளர்களை தம்பக்கம் திருப்புவதற்கு சீன அரசு முயற்சிக்கிறது.

இது மிகவும் அபாயகரமான ஒரு சூழல். இதனை தமிழ் மக்களும் தமிழ் புத்திஜீவிகளும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களின் பண்பாட்டியல் ஆழ்மன விருப்புகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் இப்போது யாழ்ப்பாணத்தின் புராதன சின்னங்களை புதுப்பிக்கவும் பாதுகாக்கவும் சீனா உதவி அளிக்கப் போகின்றது என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கான இன்னொரு கட்ட நடவடிக்கையும் சீனா மேற்கொண்டு இருக்கிறது.

தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக விழித்துக் கொள்ளாமலும், புவிசார் அரசியலில் தமக்குரிய பங்கையும் பாத்திரத்தையும் புரிந்து கொள்ளாமலும், புவிச அரசியலை தமக்கு சாதகமாக பயன்படுத்த விடாது தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சீனா செய்துகொண்டிருக்கிறது. அதாவது தமிழ் மக்களை தம்பக்கம் திருப்புவதன் மூலம் புவிசார் அரசியலை தம்பக்கம் திருப்ப முடியும் என சீனா நம்புகிறது. இலங்கை அரசும் நம்புகிறது. இரண்டு அரசுகளும் இங்கே இணைந்து செயல்படுகின்றன.

அது மட்டுமல்ல யாழ்ப்பாணத்திற்கான சீன தூதருடைய விஜயத்தின்போது அடிமட்ட ரீதியாக அரசியல் செய்யக் கூடிய வகையில் சிறுவர் முன்பள்ளி ஆசிரியர்கள், தொண்டராசிரியர்கள் என தற்காலிக தொழில் வாய்ப்பை பெற்றிருப்பவர்களுக்கு நிரந்தர தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு சீனப் பிரமுகர் உதவிய அளிப்பார் என ஒரு அரசு சார் தமிழ அரசியல் கட்சி மக்கள் மத்தியில் இந்த காலப்பகுதியில் பிரச்சாரங்களை செய்திருப்பதையும் அறிய முடிந்தது.

ஐநாவின் 181 வது தீர்மானம்
இந்த அடிப்படையில் பார்த்தால் எந்த அளவிற்கு அடிமட்ட மக்கள் மத்தியில் தமது நாசகார இனவழிப்பு அரசியலை முன்னெடுக்க இரு அரசுகளும் ஒத்தோடிகளும் இணைந்து செயல்படுகிறார்கள் என்பது புரியும். இது இவ்வாறு இருக்கும் போது யாழ்ப்பாணத்தின் அறிவியல் சமூகத்தை சீனத்துாதுவர் சந்தித்தபோது பல்வேறுபட்ட விடயங்கள் அங்கே பிரஸ்தாபிக்கப்பட்டன.

பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாத நிலை சீனத்துதுவருக்கு ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. யாழ்ப்பாணத்தின் மூத்த பத்தி எழுத்தாளர் ஒருவர் “”பலஸ்தீன இஸ்ரேல் பிரச்சனைக்கு இருநாட்டுக் கொள்கையை நீங்கள் முன்வைக்கிறீர்களே? ஆனால் ஈழத் தமிழர்களுக்கு ஐநா பாதுகாப்புச் சபை ஐநா மனித உரிமைச் சபையில் எதிராக வாக்களித்திருக்கிறீர்கள் “” என்று கேட்ட கேள்விக்கு “”இருநாட்டுக் கொள்கை என்பது ஐநாவின் முடிவைத்தான் நாங்கள் சொல்லி இருக்கிறோம் ஐ.நா சபை நாடுகளின் ஒட்டுமொத்த முடிவு அது”” என்றும் ஈழத் தமிழர் விவகாரம் என்பது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனை.

ஆகவே இலங்கையில் உள்நாட்டு பிரச்சனையில் நாங்கள் தலையிட மாட்டோம்”” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அது என்னவெனில் ஐநாவின் முடிவு என்று இவர்கள் மேல் எழுந்த வாரியாக சொல்லக்கூடும் ஆனால் உண்மையில் 29-11-1947 அன்று பிரித்தானியா பலஸ்தீன பாகப்பிரிவினை திட்டம்( Partition Plan for Palestine) என்ற ஒன்றை முன் வைத்தது.

அதனை இஸ்லாமிய நாடுகள் தவிர்ந்த அனைவரும் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதனையே ஐநாவின் 181 வது தீர்மானம் என அழைக்கப்படுகிறது. இதன்படி பலஸ்தீனமும் இஸ்ரையிலும் இரண்டு நாடுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது என்பது உண்மைதான். ஆனாலும் இந்த தீர்மானம் 5 நாடுகளின் தீர்மானமாகவே கொள்ளப்பட வேண்டும் ஐநா என்பது ஐந்து நாடுகளுக்கான அமையம் மட்டுமே என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஐநாவில் முன் வைக்கப்படுகின்ற எந்த தீர்மானத்தையும் வெட்டு ( ) அதிகாரம் உள்ள அமெரிக்கா’,ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா ஆகிய இந்த ஐந்து நாடுகளில் ஏதேனும் ஒன்று எதிர்த்தாலும் ஐநாவில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.

இந்த ஐந்து நாடுகளும் ஏற்றுக் கொண்டால் மாத்திரமே அது தீர்மானமாக நிறைவேற்றப்படும். ஆகவே இன்று ஐநாவில் 196 நாடுகள் அங்கத்துவம் வகித்தாலும் இந்த ஐந்து நாடுகளுடைய தீர்மானம் மட்டுமே அங்கே செல்லுபடியாகும் என்றால் ஐநா என்பது ஐந்து நாடுகளுக்குரிய அமையம்தானே. சரி விடியத்துக்கு வருவோம்.

அப்படியானால் பலஸ்தீனம் – இஸ்ரேல் இரண்டு நாடு என்று கொள்கையை சீனா முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறது .சீனா ஏற்காமல் விட்டிருந்தால் அன்று அதை நிராகரித்திருக்க முடியும். ஆனால் சீனா நிராகரிக்கவில்லை ஏற்றுக்கொண்டது என்ற அடிப்படையில் சீனா இரண்டு நாட்டுக் கொள்கைக்கு முழு ஆதரவை வழங்கியது என்பதே பொருளாகும். எனவே இங்கு ஐநாவின் தீர்மானம் என்று சீனா செல்வதற்கு எந்த அருகதையும் கிடையாது.

மக்களுக்கு ஆதரவாக தீர்மானம்
மற்றும் ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமை பற்றிய கேள்விக்கு தான் “” சீன அரசாங்கத்திடம் கேட்டுத்தான் பதிலளிக்க வேண்டும்”” என்று குறிப்பிட்டிருக்கிறார். யாழ்ப்பாணத்தின் மூத்த கல்வியலாளர் தூதுவரை நோக்கி “”தமிழ் மக்களுக்கு இப்போது தேவை அரசியல் அதிகாரம் . வெறூம் அபிவிருத்தீ அல்ல.

அதற்கு தங்களால் எமக்கு என்ன செய்ய முடியும்”” என்ற ஒரு கேள்விக்கனையை வீசி இருக்கிறார். திக்கி முக்காடிப்போன சீனத்துதுவர் “”இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் அதில் நாங்கள் தலையிட மாட்டோம். எங்களால் அபிவிருத்திக்கான உதவிகளை மட்டுமே செய்ய முடியும்”” என்றார் அதற்கு “”அரசியல் அதிகாரம் அற்ற அபிவிருத்தி என்பது அரசுக்கே சேவகம் செய்யும் அது தமிழ் மக்களை அழித்தொழிக்கவே உதவும்.

அது சிங்களமயமாக்கலையே இறுதியில் நிறைவு செய்யும்”” என ஒரு கல்விமான் மறுத்துரைக்க சீன தூதுவரிடம் இருந்து அதற்கான பதில் வரவில்லை. எனவே யாழ்ப்பாண கல்விமான்களை புத்திஜீவிகளை தம்பக்கம் திருப்புவது இலகுவானது அல்ல . அவர்கள் அறிவார்ந்து சிந்திக்கவும் தமது உரிமைகளை விட்டுக் கொடுக்க தயார் இல்லை என்பதும் அடக்குமுறைக்கு எதிராகவும் ஏமாற்றுக்கு எதிராகவும் அவர்கள் போராட தயாராகிவிட்டனர் என்பதனை மேற்படி நிகழ்வு வெளிப்படுத்தி இருக்கிறது இங்கே தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் இலங்கை தீவில் நடந்த இனப்படுகொலை யுத்தத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு முழுமையான ஆயுத உதவியை சீன அரசு செய்திருக்கிறது.

ஒரு இன அழிப்பு யுத்தத்திற்கு இன்னொரு அரசுக்கு ஆயுத உதவி அளிப்பது என்பது உள்நாட்டு விவாதத்தில் தலையிடுவதுதான் .ஒரு நாட்டுக்குள் அதனுடைய அந்த நாட்டுக்குள் இருந்த மக்களை அழிப்பதற்கு உதவி செய்தமை என்ற அடிப்படையில் அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிட்டு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அத்தோடு ஐநா மனித உரிமைச் சபையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களுக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக நின்று இலங்கை அரசுக்கு சார்பாகவே சீனா வாக்களித்து இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுமென தமிழ் அறிஞர்கள் சீனத் தூதுவரிடம் கூறினர்.

இந்தியாவைப் பொறுத்த அளவில் முன்பு அது இலங்கை அரசுக்குச் சார்பிக வாக்களித்திருந்நந போதிலும் அது கடந்த மூன்று தீர்மானங்களிலும் நடுநிலைமை வகைத்ததன் மூலம் தனக்குச் சார்பான நாடுகளையும் நடுநிலைமை வகிக்க செய்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வழி செய்து இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் யார் பக்கம் நிற்க வேண்டும்
ஐநா சபையில் தமிழ் மக்களுக்கு சாதகமான எந்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கும் இந்த ஐந்து நாடுகளின் அனுமதியின்றி ஆதரவின்றி நிறைவேற்ற முடியாது. ஆனால் வல்லரசுகளின் அல்லது பிராந்திய வல்லரசுகளின் கரினை அனுசரணையுடன் அல்லது தலையீட்டினாற்தான் தேசிய இனங்கள் விடுதலை பெறமுடியும் என்பதும் தேசிய இனங்கள் தமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் கடந்த 30 ஆண்டுகளில் உலகளாவிய தேசிய இனங்கள் தமது விடுதலையைச் சாத்தியமாக்கியுள்ளன.

ஆனால் வெறுமனே ஐநாவின் தலையுட்டினால் எந்த ஒரு தேசிய இனமும் விடுதலை அடைந்ததாக ஐநா மன்றத்தின் வரலாற்றில் இன்று வரை பதிவாகவில்லை ஐநா 181 தீர்மானத்தின்படி இப்போது பலஸ்தீன் ஒரு நாடாக இருக்கிறதா? அல்லது அது தனது இறமையை பயன்படுத்த முடியுமா? என்றால் இல்லவே இல்லை.

ஐநா சபையில் முழுஅளவிலான உறுப்புரிமை நாடும் கிடையாது. அது ஒரு பார்வையாளர் அந்தஸ்தை பெற்ற நாடாகவே இருக்கிறது. ஆகவே ஐநா நிறைவேற்றிய 181 தீர்மானத்தை ஐநா சபையினால் கடந்த 75 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. மேலும் சீனா இலங்கையின் உள்நாட்டு விவரங்களில் தலையிடவில்லை அல்லது தலையிட மாட்டாது என்று சொல்வது அபத்தமானது.

2000 ஆண்டுக்குப் பின்னர் இலங்கையினுடைய உள்நாட்டு விவரங்களில் சீனா மிக அதிக கவனம் செலுத்துகிறது, தலையிடுகிறது . 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபட்சேவை சிம்மாசனத்தில் அமர்த்துவதற்காக அது பல சித்தூவிளையாட்டுக்களைச் செய்திருக்கிறது.

அது ராஜபக்சாக்களுக்கு பெருவாரியான நிதி உதவி செய்திருக்கிறது இந்த அடிப்படையில் தலையிடுகின்ற இன்னுமொரு அம்சமாகவே தற்போது வடகிழக்கு நோக்கி அவர்கள் அதீத அக்கறை காட்டுவதும் ஆகிறது. வடகிழக்கு நோக்கி அவர்களுடைய அதீத அக்கறை என்பது பார்க்கு நீரிணையினை தமது கட்டுப்பாட்டுங்கள் கொண்டுவரவுதான். அதன் மூலம் பிராந்தியத்தின் வல்லரசான இந்தியாவை உளவு பார்ப்பதும் இந்தியாவை முற்றுகையிடுவதற்குமான மூலவாயங்களை கொண்டிருக்கிறது.

எனவே சீனாவின் இத்தகைய செயல்களால் இந்த பிராந்தியத்தில் எதிர்காலத்தில் ஒரு பெரும் பல பரிட்சை நடப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன .இந்த இடத்தில் தமிழ் மக்கள் யார் பக்கம் நிற்க வேண்டும் என்பதை சரிவரப் புரிந்து தமிழ் மக்களின் முதுசமான கேந்திர அமைவிடத்தை முதலீடாக பயன்படுத்தி தம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் ஐநா தலையிடாமல் வல்லரசுகளின் தலையீட்டினால் 1990க்கும் பின்னர் விடுதலை அடைந்த எரித்திரியா, சூடான், கிழக்கத்திமோர் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் தோன்றிய 23 தேசிய அரசுகளாகட்டும் சரி இவை விடுதலை அடைந்ததன் பிற்பாடு ஐநாவில் நிரந்தர உறுப்புரிமை பெற்றுள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இன்றைய சர்வதேச சூழலில் வல்லமை வாய்ந்த நாடுகளின் ஆதரவுடன் தேசிய இனங்கள் விடுதலை பெற முடியும். எனவே ஏதோ ஒரு வகையில் தம்பக்கம் நிற்கவல்ல பலம் வாய்ந்த நாடுகளின் அனுசரணையுடன் தமிழ் மக்களால் தமது விடுதலையை சாத்தியமாக்க முடியும் என்பது தெளிவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.