;
Athirady Tamil News

2024 லோக்சபா தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டவர் முன்னர் கண்டிராத மோடி

0

இந்திய லோக்சபா தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் வெளியாக விருக்கின்றன. இந்த தடவை பொதுத்தேர்தல் பிரசாரங்கள் எவ்வாறு நடைபெற்றன. நாம் நினைத்துப் பார்த்ததற்கு முற்றிலும் வேறுபட்ட முறையிலேயே அவை நடந்துமுடிந்தன.

இந்த தேர்தலில் வெற்றிபெறுவது பாரதிய ஜனதா கட்சிக்கு வெகு சுலபமான காரியம் என்றும் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியைப் பொறுத்தவரை தனது மூன்றாவது முடிசூட்டு வைபவத்துக்கு முன்னதாக ஒரு சிறிய பணியாவே பிரசாரங்களை அவர் கருதுவார் என்றும் பெரும்பாலான மக்கள் நினைத்தார்கள். எதிர்க்கட்சிகளை அலட்சியம் செய்து தனது பத்து வருடகால ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களிடமிருந்து ஆரவாரமான வரவேற்பை அவர் பெற்று மீண்டும் பெருமையுடன் பிரதமராவார் என்றே நாம் நினைத்தோம்.

ஆனால் எங்களில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தது போன்று பிரசாரங்கள் அமையவில்லை. சகல எதிர்பார்ப்புக்களையும் பொய்யாக்கி பாரதிய ஜனதா அதன் எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை தன்முனைப்புடன் முன்னெடுத்து ஒரு தற்காப்பு பாணியில் நடந்துகொண்டது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. பதவியில் இருக்கும் இரு முதலமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியா பூராவும் உள்ள பாரதிய ஜனதாவைச் சாராத அரசியல்வாதிகள் தங்கள் வீடுகளில் தேடுதல்கள் நடத்தப்பட்டு தாங்கள் கைதுசெய்யப்படக்கூடும் என்ற பயத்தில் இருந்தனர்.

எதிர்பார்க்காத இன்னொரு நிகழ்வு. வழமையாக தேர்தல்கள் நடத்தப்பட்ட முறை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட வேளைகளிலும் கூட, தேர்தல்கள் ஆணைக்குழு கண்டனத்துக்கு அப்பாற்பட்டதாகவே கருதப்பட்டது. உதாரணமாக, முன்னைய தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் தூய்மை குறித்து சந்தேகங்கள் கிளப்பப்பட்டபோது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரியாமலேயே அந்த இயந்திரங்களில் திருகுதாளங்கள் செய்யப்பட்டிருக்கக் கூடும் என்பதே பொதுவான எண்ணமாக இருந்தது.

தேர்தல்கள் ஆணைக்குழு சந்நேகத்துடனும் அவமதிப்புடனும் நடத்தப்பட்டிருக்கக்கூடிய முதல் பொதுத்தேர்தல் இதுவேயாகும். ஆட்சி நிறுவனம் சொல்வதை செய்கின்ற ஒரு அமைப்பாகவே எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவைக் கருதின. எதிர்க்கட்சிகளின் அந்த மதிப்பீடு நேர்மையானதா இல்லையா என்று ஆராய நான் முறபடவில்லை. தனது செயற்பாடுகளில் தவறு இல்லை என்று கூறி ஆணைக்குழு விடுத்த அறிக்கைகள் கோபத் தொனியில் இருந்ததுடன் எதிர்க்கட்சிகளை கண்டிப்பனவாகவும் அமைந்தன. ஆணைக்குழு உண்மையைச் சொல்வதாக இருக்கலாம். ஆனால் அதன் அறிக்கைகளின் தொனியும் இலக்குகளும் பக்கச்சார்பாக அது செயற்பட்டது என்ற முறைப்பாடுகளுக்கு வலுச்சேர்ப்பனவாகவே இருந்தன.

நாம் அரசியல் பிளவின் எந்தப் பக்கத்தில் நிற்கிறோம் என்பதற்கு அப்பால், ஒரு உண்மையைக் கூறவேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு மீதான நம்பகத்தன்மையின் வீழ்ச்சி இந்திய ஜனநாயகத்துக்கு கெடுதியானது. தனது செயற்பாடுகள் குறித்து கண்டனம் தெரிவிக்கிறவர்களில் தான் தவறு இருக்கிறது என்று ஆணைக்குழு கூறுகிறது. ஆனால், அவ்வாறு கண்டனம் தெரிவிப்பவர்கள் மறுதலையாகவே கூறுகாறார்கள். எந்த விதத்தில் பார்த்தாலும் பாதிக்கப்படுவது இந்திய ஜனநாயமே.

அதேபோன்றே, பதவியில் இருக்கும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் வீடுகள் மீதான தேடுதலும் அவர்களின் கைதும் பொருளாதாரக் குற்றங்களுடன் மாத்திரமே தொடர்புபட்டவை என்றும் தேர்தல் காலத்தில் அவை இடம்பெற்றது தற்செலானதே என்றும் அரசாங்கம் கூறுகிறது. இந்த விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பது பெரம்பாலும் நாம் எந்தப் பக்கத்தை நாம் ஆதரிக்கிறோம் என்பதைப் பொறுத்ததேயாகும்.

தனிப்பட்டவரை மையமாக வைத்து பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரங்களை தொடங்கியது மிகவும் குறிப்பாக அவதானிக்கக்கூடிய ஒரு அம்சமாக இருந்தது. நாட்டில் மிகவும் செல்வாக்கான தலைவர் நரேந்திர மோடி என்பதிலும் பாரதிய ஜனதாவுக்கு அவர் பலம்வாய்ந்த சொத்து என்பதிலும் சந்தேகமில்லை. அதனால் அவர் வேட்பாளராக நிற்காத சட்டசபை தேர்தல்களிலும் கூட அவரது செல்வாக்கை கட்சி பயன்படுத்துவது வழமை.

ஆனால், முன்னர் ஒருபோதுமே இல்லாத வகையில் பாரதிய ஜனதாவின் பிரசாரங்கள் இந்த தடவை தனியொருவருடன் அடையாளப்படுத்தப்பட்டன என்பது தெளிவானது. இந்திரா காந்திக்கு மக்கள் மத்தியில் இருந்த பேராதரவை மையப்படுத்தியதாக 1971 தேர்தல் பிரசாரங்களை காங்கிரஸ் முன்னெடுத்ததை விடவும் கூடுதலான அளவுக்கு இந்த்தடவை மோடியை பாரதிய ஜனதா காட்சிப்படுத்தியது.

தனது எதிரிகளைப் பொருட்படுத்தாமல் தனக்கு நன்றியுணர்வுடைய வாககாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அடுத்த ஐந்து வருடங்களில் செய்யப்போகின்ற பணிகள் குறித்து விளக்கமளிப்பவராகவே மோடி தேர்தல் பிரசாரங்களில் மிடுக்குடன் காணப்படுவார் என்றே நாம் எதிர்பார்த்தோம்.. ஆனால் அதற்கு பதிலாக அவர் முன்னைய பொதுத்தேர்தல்களில் நாம் கண்டிராத ஒரு மோடியாகவே காட்சிதந்தார். வலியச் சென்று சண்டைபிடிக்கும் அடாவடித்தனமான பேர்வழி போன்றும் கடுமையான உணர்ச்சிகளுடன் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்கின்ற ஒருவராகவும் முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் தனது வகிபாகம் மீது கூடுதல் கவனத்தைச் செலுத்துகின்றவராகவுமே மோடியை இந்த தடவை நாம் கண்டோம். அவர் அடிக்கடி தன்னை வேறு ஒருவராக அல்லது யாரோ ஒருவராக அல்லது மூன்றாவது மனிதனாக சுட்டிப் பேசினார்.

பொதுத் தேர்தல்களில் இந்து — முஸ்லிம் அரசியலைப் பேசுவதற்கு தயங்கும் தனது பழைய பழக்கத்தை இந்த தடவை மோடி கைவிட்டது முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும். முதல் இரு கட்ட வாக்குப்பதிவுகளின் போதும் வாக்களிப்பு வீதம் குறைவாகக் காணப்பட்தனால் அல்லது பாரதிய ஜனதா தொண்டர்கள் சோர்வடைந்ததால் அவர்களை உஷார்ப்படுத்துவதற்காக அவர் மதவெறிப் பேச்சுக்களை தீவிரப்படுத்தினார் என்பது எனது அபிப்பிராயம்.

பிறகு இறுதிக்கட்ட வாக்குப் பதிவுகளின்போது அடுத்த அரசாங்கத்தை அமைக்கப்போவது தாங்களே என்ற நம்பிக்கை ஏற்பட்டதும் மோடி மதவெறிப் பேச்சுக்களைத் தணித்து தனது சிறந்த நண்பர்களில் சிலர் முஸ்லிம்களே என்று கூத்தொடங்கினார். இந்தியா கூட்டணி அதிகாரத்துக்கு வந்தால் இந்துப் பெண்களின் கழுத்துகளில் இருந்து தாலிகளை அறுத்துவிடுவார்கள் என்றும் இந்துக்களின் எருமை மாடுகளை அபகரித்துவிடுவார்கள் என்றும் பேசினார். என்றாலும் இந்து — முஸ்லிம் தொனிப்பொருள் முற்றுமுழுதாக இல்லாமல் போகவில்லை. சில தினங்களுக்கு முன்னர் பீஹாரில் ‘ காதல் ஜிகாத் ‘ பற்றி பேசினார்.

இந்து வாக்குகளை மத வழியில் அல்லது சாதி வழியில் அணிதிரட்ட முடியும் என்பது இந்திய அரசியலில் ஒரு இயக்கவிசையாக இருக்கிறது. இதற்கு மிகவும் பிரபல்யமான உதாரணத்தை ‘ மற்றைய பினதங்கிய வகுப்பினருக்கு ‘ இடஒதுக்கீட்டை வழங்கும் மண்டல் ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதாக வி.பி.சிங் அறிவித்தபோது காணக்கூடியதாக இருந்தது. வி.பி.சிங்கின் அந்த சடுதியான நடவடிக்கையை எதிர்த்த பாரதிய ஜனதாவின் எல்.கே. அத்வானி ரதயாத்திரையை தொடங்கினார். பாரதிய ஜனதாவின் பிரசாரங்களில் ராம் மந்திர் மைய இடத்துக்கு வந்தது.

இந்த தடவையும் அந்த சமரின் எதிரொலிகளைக் கேட்கக்கூடியதாக இருந்தது. இந்துக்களின் சொத்துக்களை பறித்து காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு கொடுக்கும் என்று பிரதமர் கூறியபோது பாரதிய ஜனதா சகல இந்துக்களினதும் கட்சி அல்ல, உயர்சாதிகளின் கட்சி மாத்திரமே என்று ராகுல் காந்தி பதிலுக்கு சொன்னார். மறுபுறத்தில் , சாதிவாரி குடிசனமதிப்பீடு ஒன்றை எடுக்கப்போவதாகவும் பாரதிய ஜனதாவின் உயர்சாதிச் சார்பின் விளைவாக கவனிக்காமல் விடப்பட்ட மற்றைய சாதிக்குழுக்களின் மேம்பாட்டுக்காக பாடுபடப்போவதாகவும் காங்கிரஸ் கூறியது.

மேலும், பாரதிய ஜனதா அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமான நட்புவட்டார முதலாளிகளுக்கு சலுகை காட்டுவதாகக் குற்றஞ்சாட்டியதன் மூலமாக பிரசாரங்களில் வர்க்க அடிப்படையிலான ஒரு அம்த்தையும் காங்கிரஸ் புகுத்தியது. அதிகாரத்துக்கு வந்தால் றொபின் ஹூட் பாணியில் வறியவர்களுக்கு உதவப்போவதாக காங்கிரஸ் கூறியது. 1971 பிரசாரங்களின் போது இந்திரா காந்தி தனவந்தர்களை மூழ்கடிக்கப்போதாக கூறியதற்கு பிறகு இப்போதுதான் காங்கிரஸ் தனவந்தர் — வறியவர் வேறுபாடு தொடர்பில் தீவிரமான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

இது உண்மையில் பாரதிய ஜனதாவை அதிர்ச்சியடைய வைத்தது. ஏனென்றால் காங்கிரஸின் வாயை அடைப்பதற்காக மோடி அந்த கட்சிக்கு அம்பானிகளும் அதானிகளும் பணத்தை வாரியிறைத்ததாக எவரும் எதிர்பாராத வகையில் பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது.

பாரதிய ஜனதா அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் அல்லது மோடி. பிரதமர் பதவியில் தொடர்ந்து இருப்பார் என்பதில் கருத்தார்ந்த எந்தவொரு ஆய்வாளருக்கும் சந்தேகம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், இந்திய அரசியலில் எதையும் மெத்தனமாக நோக்கிவிடக்கூடாது என்பதை பிரசாரங்கள் காட்டுகின்றன. எங்கிருந்தோ புதிய விவகாரங்கள் மேலெழுந்தன. நாம் எதிர்பார்த்த பாதையில் பிரசாரங்கள் செல்லவில்லை.

ஆனால் ஒரு விடயத்தில் சந்தேகம் இல்லை. இந்த பிரசாரங்கள் இந்திய தேர்தல் முறைமைக்கு எந்த அனுகூலத்தையும் செய்யவில்லை. வெற்று ஆரவாரப் பேச்சுககள் ஆழமான கருத்துக்களை மூழ்கடித்தன ; எதிர்க்கட்சிகளுக்கு எதிராக புலனாய்வு விசாரணை அமைப்புககள் பயன்படுத்தப்பட்டன ; பாரதிய ஜனதாவுக்கு எதிரான கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவை வெளிப்படையாகவே அவமதித்தன. இவையெல்லாம் வரவேற்கக்ககூடிய நிகழ்வுப் போக்குகள் அல்லவே.

ஏனென்றால் இறுதியில் எந்த கட்சி வெற்றிபெறுகின்றது என்பது அல்ல இந்திய ஜனநாயக முறைமை வெற்றிபெறுகிறதா இல்லையா என்பதே உண்மையில் முக்கியமானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.