கெரவலப்பிட்டிய, புளுமென்டல் பகுதிகளில் புதிய கொள்கலன் முனையங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பு

(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பு துறைமுகம் உலகில் உள்ள சக்தி வாய்ந்த பொருட்கள் பரிமாற்றம் மேற்கொள்ளும் மத்திய நிலையமாகும்.ஆனால் அதன் பயனை எம்மால் முழுமையாக அடைய முடியாதுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கெரவலப்பிட்டிய மற்றும் புளுமென்டல் பகுதிகளில் புதிய கொள்கலன் முனையங்களை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டங்களை நாம் மிக விரைவாக ஆரம்பிக்க உள்ளோம்.ஒன்றறை வருடங்களுக்குள் இந்தத் திட்டங்களை எம்மால் பூரணப்படுத்த முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விடுவிப்பு செயற்பாட்டில் பாரிய நெரிசல் காணப்படுகிறது.வருடாந்தம் 75 இலட்சம் கொள்கலன்கள் இந்த துறைமுகத்தில் பரிமாறப்படுகின்றன.ஆனால் 15 வீதம் மாத்திரமே நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.
அவற்றுள் 85 வீதமானவை ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு ஏற்றப்படுகிறன. ஒரு முனையத்தில் இறக்கப்பட்டு மற்றுமொரு முனையத்தில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கொள்கலன்கள் உள்ளக ரீதியாக பரிமாறப்படுகின்றன.
கொழும்பு துறைமுகம் உலகில் உள்ள சக்தி வாய்ந்த பொருட்கள் பரிமாற்றம் மேற்கொள்ளும் மத்திய நிலையமாகும்.ஆனால் நாம் அதன் பயனை முழுமையாக பெற்றுக் கொள்வதில்லை.திட்டங்களை வகுத்துள்ளோம்.தற்போது கிடைக்கப்பெறும் 7.5 பில்லியனையை இரட்டிப்பாக்க வேண்டும்.
ஆனால் இந்தத் துறைமுகத்தில் அதனை செய்ய முடியாது.இந்த 15 வீதத்தையும் வெளியே கொண்டு வர முடியவில்லை.அவ்வாறு எடுத்தாலும் பிரச்சினை உள்ளது.அதனை வெளியே கொண்டு வந்து அங்கும் இங்குமாக பரிமாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கப்பல்கள் வருவதில்லை.ஆனால் இது தொடர்பில் அரசாங்கத்திடம் நீண்ட கால திட்டம் இருந்திருக்க வேண்டும்.ஆனால் கடந்த அரசாங்கத்திடம் இந்தத் திட்டங்கள் இருக்கவில்லை.அவ்வாறாயின் நாம் என்ன செய்ய வேண்டும்.
கொழும்பு துறைமுகத்திலிருந்து எமது 15 வீதத்தை வெளியே எடுக்க வேண்டும்.அதனை வெளியே எடுக்க வேண்டுமானால் எம்மிடம் சிறந்த குதங்கள் இருக்க வேண்டும்.எம்மிடம் அந்த வசதிகள் இல்லை.சிறிய நிலப்பரப்பில் அதனை பரிசோதிக்க நேரிடுகிறது.இவ்வாறு பரிசோதிக்கும் போது வரிசை ஏற்படுகிறது.கொள்கலன் பரிமாற்றம் இடம்பெறாதால் கப்பல்கள் திரும்பி செல்கின்றன.அவர்கள் நாட்டை சரியாக நிர்வகிக்க இல்லை.
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.கெரவலப்பிட்டிய வில் புதிய கொள்கலன் முனையமொன்றை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தை மிக விரைவாக ஆரம்பிப்போம்.அதிவேக நெடுஞ்சாலை ஊடாக நேரடியாக கொண்டு சென்று பரிசோதித்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்போம்.அவ்வாறு செய்யும் போது துறைமுகத்தில் ஏற்படும் நெரிசல் நிலைமை குறைவடையும்.
மேலும்,இலங்கை சேர்ந்த வர்த்தகர் ஒருவருடனும் கதைத்துள்ளோம்.அவர் புளுமேன்டலில் உள்ள குப்பை மேட்டை அகற்றி கொள்கலன் முனையம் ஒன்றை அமைப்பதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளார். ஒன்றறை வருடங்களுக்குள் இந்தத் திட்டங்களை எம்மால் பூரணப்படுத்த முடியும் என்றார்.