பொறுப்புக்கூறலுக்கான நியமங்களை பாகுபாடான முறையில் பிரயோகிப்பதில் ஐக்கிய நாடுகள் எதிர்நோக்கும் சவால்

கலாநிதி ஜெகான் பெரேரா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேர்க் இம்மாத பிற்பகுதியில் இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தை ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கில் மூண்டிருக்கும் போர் நிலைவரம் ஔிமறைப்பு செய்துவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
அவரின் விஜயம் உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான 16 வருடங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொடர்ச்சியான பல தீர்மானங்களுடன் தொடர்புடையது. அது சட்டரீதியான கடப்பாடுகளை விடவும் புவிசார் அரசியல் நலன்கள் விஞ்சிய முக்கியத்துவமுடையவையாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கில் உள்ள முரண்பாடுகளை முனைப்பாக வெளிக்காட்டுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்கள் மோதல்களின்போது மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வெளிக்காட்டுகின்றன. அவை ஜெனீவா சாசனங்களாலும் அட்டூழியங்களுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படாமல் விடப்படக்கூடாது என்ற போருக்கு பின்னரான உலகளாவிய கருத்தொருமிப்பாலும் விளக்கமாகக் கூறப்படுகின்ற சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சடடங்களின் நிலைபேறான மரபின் ஒரு பகுதியாகும்.
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் விஜயம் பலம் பொருந்திய நாடுகளின் மீறல்கள் தொடர்பில் காட்டுகின்றதை விடவும் கூடுதல் அக்கறையுடன் ஐக்கிய நாடுகள் இலங்கையை சர்வதேச நியமங்களை பின்பற்ற வைப்பதில் நாட்டம் காட்டுகிறது என்ற விமர்சனங்களை கிளம்பவைக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
ஈரானிலும் காசாவிலும் இஸ்ரேல் மேற்கொள்கின்ற இராணுவ நடவடிக்கைகளுடன் ( இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்ற காரணத்தின் அடிப்படையில் ) செல்வாக்குமிக்க நாடுகள் இணங்கிப் போகின்றன அல்லது உண்மையில் மௌனமாக அங்கீகரிக்கின்றன போன்று தெரிகிறது. இதே போன்ற இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் வேறு சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து 2003 ஆம் ஆண்டில் ( பேரழிவைத்தரும் ஆயுதங்களை நிர்மூலம் செய்வதற்காக என்று கூறிக்கொண்டு) ஈராக்கில் மேற்கொண்டன.
இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் இரண்டகத்தனமாக நடந்துகொள்கிறது என்பதே அதன் ஈடுபாட்டை விமர்சிப்பவர்களின் முக்கியமான வாதங்களில் ஒன்றாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் பலவீனமான நாடுகளை அளவுமீறி இலக்குவைத்து சர்வதேச முறைமையை அவற்றின் மீது திணிக்கிறது என்பதும் பலம் பொருந்திய நாடுகளின் மீறல்களை கண்டும் காணாமல் விடுகிறது என்பதும் இந்த விமர்சகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் அணுகுமுறைகள் உலகளாவிய மனித உரிமைகள் நியமங்களின் நம்பகத்தன்மையை மலினப்படுத்துகிறது என்பது அவர்களின் வாதம்.
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வருகை இலங்கையில் ஐக்கிய நாடுகளின் ஈடுபாட்டின் நோக்கத்தையும் நியாயப்பாட்டையும் பற்றி உள்நாட்டில் விவாதத்தை மூளவைக்கக்கூடிய சாத்தியமும் இருக்கிறது. சர்வதேச நியமங்கள் தேசிய மாற்றத்துக்கு உருப்படியான பங்களிப்பை செய்கிறதா அல்லது வெளிநாட்டு கண்காணிப்பை சமாளிப்பதற்காக, பயனுறுதியுடைய மாற்றம் எதுவும் இல்லாமல் வெறுமனே அடையாளபூர்வமான நடவடிக்கைகளாக குன்றிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
சர்வதேச ஈடுபாட்டை உள்நாட்டுத் தவறுகளை திருத்துவதற்கு அவசியமானவை என்று நோக்குபவர்கள் ஒருபுறத்திலும் தேசிய இறைமையை மீறும் செயல் என்று நோக்குபவர்கள் மறுபுறத்திலும் இருக்கிறார்கள். மூன்று தசாப்தகால போரின்போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரம் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் உணர்ச்சியைக் கிளற வைப்பதாகவும் இருந்து வருகிறது. தேசிய பாதூகாப்பு என்ற போர்வையின் கீழ் தங்களது அட்டூழியங்களை நியாயப்படுத்துகின்ற ஏனைய பல நாடுகளைப் போலன்றி, இலங்கை அதன் சிக்கலானதும் வேதனைமிக்கதுமான வரலாற்று பின்புலத்தில் அதன் கடந்த காலத்தைக் கையாணடு உதாரணத்தை வகுக்கக்கூடிய சந்தர்ப்பத்தைக் கொண்டிருக்கிறது.
சர்வதேச நிலைகுலைவு
பேரழிவை ஏற்படுத்திய இரு உலகப் போர்களை தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வன்முறைகளை தடுக்க இராஜதந்திரம் தவறிவிட்டது என்பதை ஏற்றுக்கொண்டு நவீன சர்வதேச முறைமை தோன்றியது. சட்டம், நிறுவன ஒத்துழைப்பு மற்றும் பல்தரப்பு ஆட்சிமுறை ஊடாக சமாதானத்தைப் பேணக்கூடிய சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச ஒழுங்கை நிறுவுவதற்கான கூட்டு உறுதிமொழி ஒன்றே அந்த முறைமையின் மையமாக இருந்தது. இரண்டாவது உலகப்போரின் மாபெரும் அட்டூழியங்களையும் மனித அவலங்களையும் தொடர்ந்து சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டத்தின் வளர்ச்சி மிகவும் முனைப்பானதாக அமைந்தது. அந்த நேரத்தின் வல்லாதிக்க நாடுகள் அத்தகைய பயங்கரங்களை மீண்டும்
ஒருபோதும் அனுமதிக்காத புதிய உலக ஒழுங்கு ஒன்றுக்கு தலைமை தாங்குவதற்கு உறுதிபூண்டன.
அதிகாரமும் வல்லமையும் மாத்திரமே நீதியைத் தீர்மானித்த காட்டுச்சட்டம் மீண்டும் திரும்புவதற்கு எதிரான ஒரு பாதுகாப்பாக, ஐக்கிய நாடுகள், ஜெனீவா சமவாயங்கள், ஊடாக சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சரவதேச ஒழுங்கு குறித்த நோக்கு நிறுவனமயப்படுத்தப்பட்டது. சரவதேச நீதிமன்றம் மற்றம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேச நீதி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. ஆனால், இந்த சர்வதேச முறைமை அண்மைய தசாப்தங்களில் நெருக்குதலுக்கு உள்ளாகும் போக்கு அதிகரித்தது.
அந்த முறைமை ஆரம்பத்தில் எந்த நோக்கை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டதோ அதன் அடிப்படையில் இப்போது செயற்படுவதில்லை என்பதை அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றன. நடைமுறையில், ஒரு அரசின் அந்தஸ்து அல்லது வல்லமையை பொருட்படுத்தாமல் சர்வதேச சட்டம் முரண்பாடற்ற முறையில் பிரயோகிக்கப்படுவது சமரசத்துக்கு உள்ளானது. குறிப்பாக, வல்லாதிக்க நாடுகள் சட்ட நியமங்களைை அவற்றின் வசதிக்கேற்ற முறையில் நடைமுறைப்படுத்துகின்ற போக்கின் விளைவாக அந்த முறைமையின் நியாயப்பாடு அருகிப்போவதுடன் சர்வதேச சட்டத்தின் கருவாக அமைந்த பொதுமை நோக்கும் ( Universalism ) கேள்விக்கு உள்ளாகிறது.
தற்போது குறைந்தது மூன்று பிரதான சர்வதேச மோதல்கள் இடம்பெறுகின்றன. உக்ரெயின் போர், காசா போர், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் ஆகியவையே அவையாகும். சர்வதேச சட்ட நியமங்களை நடைமுறைப்டுத்துவதில் நிலைகுலைவு ஏற்பட்டிருப்பதை இந்த மோதல்கள் வெளிக்காட்டுகின்றன. சட்டக்கடப்பாடுகளை வெளிப்படையாகவே மதிக்காமல் செயற்படுகின்ற வல்லாதிக்க நாடுகள் சம்பந்தப்பட்ட இந்த மோதல்களைப் பொறுத்தவரை, சர்வதேச சமூகம் குறிப்பாக அதன் செல்வாக்குமிக்க உறுப்பு நாடுகள் காக்கும் மௌனம் வெளிப்படையாகத் தெரிகிறது.
தென்னாபிரிக்கா போன்ற ஒருசில நாடுகளே இந்த மோதல்களில் இடம்பெறுகின்ற சர்வதேச சட்டமீறல்கள் குறித்து பிரச்சினை கிளப்புவதில் நாட்டம் காட்டுகின்றன.
பரந்தளவிலான மௌனம் அல்லது வல்லாதிக்க நாடுகள் தஙகளுக்கு வசதியான முறையில் இந்த மோதல்களை கையாளுவது சர்வதேச சட்டம் அரசியல் அனுகூலத்துக்கு உட்பட்டது என்றும் அதன் அதிகாரம் புவிசார் அரசியல் மதிப்பீடுகளுக்கு கீழ்ப்படிவானதாக இருக்கமுடியும் என்றும் நிலவுகின்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைகிறது. ஈராக், லிபியா, சிரியா போன்ற வளமான நாடுகளின் பாழ்நிலை இதற்கு முன்னைய உதாரணங்களாகும்.
முரண்பாடின்மையை பேணுதல்
நம்பகத்தன்மை வாய்ந்ததும் பக்கச்சார்பு இல்லாததுமான பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையுடன் கூடிய சர்வதேச சட்ட முறைமை ஒன்றை பேணவேண்டியதன் முக்கியத்துவத்தை இலங்கை நிலைவரம் வெளிக்காட்டி நிற்கிறது. கடுமையான போர்க்கால மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் பிரச்சினையை உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றின் ஊடாக கையாள இயலாதநாக இலங்கை்இதுவரையில் இருந்து வந்திருக்கிறது. ஆனால், பாகுபாடான முறையில் சர்வதேச நியமங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என்பதே இலங்கை அனுபவத்தில் இருந்து பெறக்கூடிய விரிவான படிப்பினையாகும்.
சிறிய அல்லது குறைந்த வல்லமை கொண்ட நாடுகள் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று உலக நிறுவனங்கள் விரும்புவதானால், அவை இஸ்ரேல், ரஷ்யா மற்றும் அமெரிக்கா உட்பட வல்லாதிக்க அரசுகளுக்கும் அதே நியமங்களை பிரயோகிக்க வேண்டும். அவாவாறு செய்யத் தவறும் பட்சத்தில் சர்வதேச சட்ட முறைமை என்பது உலகம் பூராவும் நீதியை ஒப்புரவாக உறுதிப்படுத்துவதற்கான ஒரு அத்திபாரமாக அன்றி, பாகுபாடான முறையில் சிறிய நாடுகளை பலவந்தப்படுத்துவதற்கான கருவி என்ற எண்ணம் உருவாகக்கூடிய ஆபத்து இருக்கிறது.
சரவதேச நடைமுறைகளில் இரண்டகத்தனமான நியமங்கள் இருக்கின்ற போதிலும், கோட்பாடுகளையும் சர்வதேச சட்ட நடைமுறைப்படுத்தலையும் ஆதரிப்பது இலங்கையின் நலன்களுக்கு உகந்ததாகும். எவ்வளவுதான் பலவீனமானதாக இருந்தாலும், சர்வதேச சட்டம் ஒன்று இருப்பது சிறிய நாடுகளைப் பொறுத்தவரை, அவை வல்லாதிக்க நாடுகளின் கொடிய நடத்தைகளுக்கு முகங்கொடுக்கும்போது சில மட்டங்களில் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த காரணங்களுக்காக, இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான முன்னைய கடப்பாடுகளை மதிப்பதற்கும் உறுதிமொழிகளை சாத்தியமான அளவுக்கு நடைமுறைப்படுத்துவதற்கும் தன்னாலியன்றதைச் செய்ய வேண்டும்.
ஐக்கிய நாடுகள் உட்பட பல்தரப்பு அரங்கங்களில் இலங்கை இந்த கடப்பாடுகளை அதன் இறைமை மற்றும் நியாயப்பாட்டை பாதுகாப்பதற்கு உதவும் ஒரு மூலோபாயச் சொத்தாக முன்னிலைப்படுத்த வேண்டும். அதேவேளை, பாகுபாடான முறையில் சர்வதேச நியமங்கள் பிரயோகிக்கப்படுவதை கேள்வி கேட்டு சவாலுக்கு உட்படுத்துவதற்கு இந்த அரங்கங்களை இலங்கை நிச்சயம் பயன்படுத்த வேண்டும்.
பலவீனமான நிலையில் உள்ள சமூகங்களை பாதுகாப்பதிலும் சர்வதேச சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த — கோட்பாடுகளைப் பின்பற்றுகின்ற ஒரு நாடாக தன்னை நிலை நிறுத்துவதிலும் இலங்கை அதன் கருத்தூன்றிய அக்கறையை வெளிப்படுத்துவதன் மூலம் சர்வதேச சட்டமும் கோட்பாடுகளும் முரண்பாடில்லாத முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற பரந்த அழைப்புக்கு உறுதியான பங்களிப்பை வழங்க முடியும்.
சர்வதேச நியமங்களுக்கு இவைான முறையில் கடந்த காலத்தைக் கையாளுவது இலங்கையின் உள்நாட்டு நல்லிணக்கத்துக்கும் ஒருங்கிணைப்புக்கும் அவசியமானது. நிலைமாறுகால நீதிக் கோட்பாடு ( உண்மை, பொறுப்புக்கூறல், இழப்பிடு மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தம் ) பொதுமையாக பிரயோகிக்கக்கூடியது மாத்திரயல்ல, போருக்கு பின்னரான எந்தவொரு சமூகத்தினதும் நீணடகால அபிவிருத்திக்கும் முக்கியமானதாகும்.
இந்த கோட்பாடுகள் சகல பின்புலங்களிலும் காலகட்டங்களிலும் பிரயோகிக்கப்படுகின்றன. இலங்கை ஒரு ஐக்கியப்பட்ட, உறுதிப்பாடுகொண்ட , வளமான நாடாக வளர வேண்டுமானால், ( மற்றைய நாடுகள் எதைச் செய்கின்றன,எதைச் செய்யாமல் இருக்கின்றன என்பதை பொருட்படுத்தாமல்) இந்த செயன்முறையை முன்னெடுக்க வேண்டும். இலங்கை அதன் கடந்த காலத்தை ஒப்புக் கொண்டு கையாளுவதன் மூலம் மாத்திரமே அதன் பல்லின, பல்மதப் பண்பு பலவீனத்துக்கு அல்ல பலத்துக்கான ஒரு ஆதாரமாக மாறக்கூடிய எதிர்காலத்தை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.