;
Athirady Tamil News

இலங்கையை உலுக்கி எடுத்த இயற்கைப் பேரழிவு : நாட்டின் துயரம்

0

ரொபட் அன்டனி

மீண்டும் ஒருமுறை இலங்கையை இயற்கையின் கோரத் தாண்டவம் வாட்டி வதைத்திருக்கிறது. நாட்டின் சகல பகுதிகளையும் உலுக்கி எடுத்த இந்த அனர்த்தம், எண்ணிலடங்கா சேதங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கைகளின்படி, இதுவரை 334 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 370 பேரைக் காணவில்லை என்று அதிகாரப்பூர்வமாகப் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இந்த இயற்கைச் சீற்றத்தினால் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 12 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும், இடைத்தங்கல் முகாம்களிலும் தங்கியுள்ளனர். பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், மக்கள் மேல்மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பேரழிவின் கோர முகம்

“தித்துவா” என்று குறிப்பிடப்படும் இந்தப் புயல், நாட்டைப் பதம் பார்த்ததில் வெள்ளம், மண்சரிவு, பலத்த காற்று, மற்றும் அடைமழை போன்ற பல்வேறு அனர்த்தங்கள் ஒருசேரத் தாக்கின. பல கிராமங்கள் மண்ணுக்குள் புதையுண்டு, பலர் மண்ணுக்குள் சிக்கியுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட இந்த அழிவால், வீதிகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன, வீடுகள் அழிவடைந்துள்ளன, வாகனங்கள் நீருக்கு அடியில் மூழ்கியுள்ளன, மக்களின் உடமைகளும் சொத்துக்களும் நீருக்குள் மூழ்கி அளவிட முடியாத இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

மக்கள் மனதின் வலி

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களும், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களும் தங்கள் வலியைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

நாதாண்டியாவைப் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“இதற்கு முன்னர் பல தடவைகள் நாதாண்டியாவுக்கு வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது, ஆனால் எங்கள் வீட்டுக்கு ஒருபோதும் வெள்ளம் வந்ததில்லை. எனினும், இம்முறை எங்கள் வீட்டிற்குள் வெள்ளம் வந்துவிட்டது,” வெள்ளிக்கிழமை இரவு திடீரென நீர் புகுந்தது. , விரைந்து நான்கு அடி, ஐந்து அடி அளவுக்கு நீர் வந்துவிட்டது.

அந்த நள்ளிரவில், ஐந்து அடி தண்ணீரில், வெளிச்சமின்றி, காலணிகள் இன்றி, தாய் தந்தையை அழைத்துக்கொண்டு செல்வது எவ்வளவு பயங்கரமான மனநிலையை ஏற்படுத்தியது என்பதை எண்ணிப் பாருங்கள்,”. வெள்ளம் காரணமாகத் எமது உடைமைகள் ஆவணங்கள் பெருமதியான பொருட்கள் தளபாடங்கள் அனைத்தும் மூழ்கிவிட்ட போதும், “நாங்கள் மீண்டு வருவோம்,” என்ற நம்பிக்கையைக் கைவிடவில்லை என்றார்.

62 வயதான சுனில் என்பவர் அதிகாரிகளின் மீட்பு நடவடிக்கைகள் குறித்துக் கவலை தெரிவித்தார். அவர், “இந்த இடத்தில் மக்கள் மற்றொரு நகரத்துக்குச் செல்வதற்கு இரண்டு நாட்களாகக் காத்திருக்கின்றனர். ஆனால், இன்னும் அதற்கான படகு ஒன்றைக் கூடப் பெற்றுக்கொடுக்க முடியாமல் இருக்கிறது,” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

எனினும், மோட்டார் சைக்கிளில் வெள்ள நிலையைப் பார்வையிட வந்த ஒருவர், அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டினார். “அரசாங்கம் முடியுமானவரை சேவைகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறது. அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர்.

ஆனால், இது முழு நாட்டிலும் திடீரென ஏற்பட்ட பேரழிவு என்பதால், யாராலும் எதையும் உடனடியாகச் செய்துவிட முடியவில்லை. நாம் இந்த நேரத்தில் குறை கூறிக்கொண்டிருக்காமல், சகலருக்கும் எமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளரோ, தனது வாழ்வாதார இழப்பை எண்ணித் தவித்தார். அவர், “என்னுடைய மூன்று கார்கள், ஒரு லொறி ஒரு வேன் இப்போது தண்ணீருக்குள் மூழ்கி இருக்கின்றன. நான் இங்கிருந்து அவற்றைப் பார்க்க முடிகிறது. ஆனால், அந்த இடத்துக்கு என்னால் செல்ல முடியவில்லை. நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை,” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்பு துண்டிப்பும் துயரமும்

இந்த அனர்த்தத்தில் மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்றாக மக்கள் கருதுவது தொலைபேசி மற்றும் இணையச் சேவைகள் முடங்கியமையாகும். இதற்கு முன்னர் சுனாமி போன்ற அனர்த்தங்கள் நிகழ்ந்தபோதும், தொலைபேசி இணைப்புகள் இவ்வளவு நாட்கள் இயங்காமல் இருந்ததில்லை.

முகாமில் தங்கியுள்ள ஒரு பெண்மணி, “திடீரென நீர் இரவு எங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டது. அதன் பின்னர் ஒருவாறு குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஆனால், இன்னும் என்னால் எனது உறவினர்களுக்குத் தகவல் கூற முடியாமல் இருக்கின்றது. காரணம், தொலைபேசி தொடர்புகள் இல்லாமல் இருக்கின்றது,” என்று கவலையுடன் தெரிவித்தார்.

மற்றொருவர் கோபத்துடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு பல தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளது. ஆனால், எந்த ஒரு தொலைபேசியும் இயங்கவில்லை. தொலைபேசிகளில் மின்சார வசதி இல்லை. எப்படி நாங்கள் தொடர்பு கொள்வது? அப்படியானால், இந்த இலக்கங்களை வழங்கி என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.

நீர் கொழும்பிலிருந்து கொட்டாரமுல்லையில் இருக்கும் தமது மனைவி மற்றும் பிள்ளைகளை நான்கு நாட்களாகத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த ஒருவர், “நீங்கள் சென்று அந்த நிலைமையைப் பார்த்துவிட்டு கூற முடியுமா?” என்று கண்ணீருடன் கேட்ட சம்பவம், இந்தத் தொடர்பு துண்டிப்பின் ஆழமான தாக்கத்தை வெளிப்படுத்தியது.

நாத்தாண்டி நகர் மத்தியில் மக்கள் தண்ணீரை பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு தாய் ஒருவர் தனது மகளுக்கு இன்று குழந்தை பிறக்கும் தினம் அவரை எப்படியாவது மாறவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஒரு தெப்பம் ஒன்றை உருவாக்கி அந்த கர்ப்பிணியை அந்த தெப்பத்தில் வைத்து வெள்ள நீரை கடந்து பின்னர் அந்த தெப்பத்துடன் அவரை ஒரு லொறியில் ஏற்றி கொண்டு சென்றனர்.

அதன் பின்னர் இடையில் மீண்டும் வெள்ளநீர் வந்தது. அப்போது அந்த இடத்தில் மீண்டும் லொறியிலிருந்து தெப்பத்தை கர்ப்பினியுடன் இறக்கி தண்ணீரில் கொண்டு சென்று மற்றும் ஒரு வாகனத்தில் வைத்தியசாலையை கொண்டு சேர்த்தனர். இது போன்று பல உணர்வு பூர்வமான சம்பவங்கள் இங்கு பதிவாகின.

இதற்கிடையில் ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் குளிரில் நடுங்கி கொண்டிருப்பதாக தகவல் வந்தது. அங்கிருந்து இளைஞர்கள் உடனடியாக தெப்பம் ஒன்றை உருவாக்கி அவரையும் அதில் வைத்தியசாலை கொண்டு சென்றனர். ஆனால் அவர் அப்போது உயிரிழந்து விட்டார்.

மீட்புப் பணிகளும் ஈடுபாடும்

தொலைத்தொடர்புச் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த போதும், அரசாங்கத்தின் மீட்புப் பணிகளும் மக்களுடைய கூட்டு முயற்சியும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளைப் பயன்படுத்தி மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கிராமப்புறங்களில் மக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் மிக ஈடுபாட்டுடன் செயல்பட்டதை அவதானிக்க முடிந்தது. மீட்புப் பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றினர்.

வெண்ணப்புவில் நடந்த ஒரு மீட்புப் பணியின் போது, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, அதனைச் செலுத்திய விமானி உயிரிழந்த சம்பவம், மக்களை உணர்வுபூர்வமாக வாட்டியது. “தம்மை காப்பாற்ற வந்த ஒரு விமானி உயிரிழந்துவிட்டார்,” என்ற சோகம் அந்த மக்கள் முகங்களில் நிழலாடியது.

இடைத்தங்கல் முகாமில் நடந்த ஒரு சம்பவம், மனிதநேயத்தின் வெளிப்பாடாக அமைந்தது. இரவு 2 மணியளவில் முகாமிற்கு வந்த 150 பேரில் ஒருவர் தனது தாயைக் காணவில்லை என்று அழ ஆரம்பித்தார். அவர் வீட்டுக்குள் சிக்கியிருப்பார் என்று யூகித்த இளைஞர்கள், வாழை மரங்களைக் கொண்டு உடனடியாகத் தெப்பம் ஒன்றை உருவாக்கி, சென்று அந்த 80 வயது அம்மாவை மீட்டுக் கொண்டு வந்தனர். இது போன்ற பல சம்பவங்கள், நாடு முழுவதும் பதிவாகி மனிதநேயத்தை நிலைநிறுத்தின.

பாடங்களைக் கற்க வேண்டிய அவசியம்

இந்த அனர்த்தத்துக்கு இலங்கை தயாரான விதம் குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. சரியான முறையில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டனவா, மக்களை வெளியேறுமாறு கூறப்பட்டதா போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு சிலர் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டதாகக் கூறினாலும், வேறு சிலர் அவ்வாறு எந்தவிதமான அறிவித்தலும் அதிகாரிகளால் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர்.

தற்போது அனைத்துக்கும் பின்னரான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சரியான முறையில் நடைபெறுகின்றனவா என்ற கேள்விகளும் எழுகின்றன. இலங்கையில் இதற்கு முன்னர் சுனாமி, மண்சரிவு அபாயங்கள், வெள்ளப்பெருக்குகள் எனப் பல அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனாலும், “இந்த அனுபவங்களில் இருந்து நாம் இன்னும் பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லையா,” என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது.

இந்த நெருக்கடியிலிருந்து இலங்கை உடனடியாக மீண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்பட வேண்டும். அத்துடன், எதிர்காலத்தில் இதுபோன்ற அனர்த்தங்கள் வரும்போது, சேதங்களைக் குறைத்துக்கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

சுனாமி, மண்சரிவு, வெள்ளம் எனப் பல பேரழிவுகளை நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால், இன்னும் நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் தகவல்களின் இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் படி நாட்டில் கிட்டத்தட்ட 15,000 வீடுகள் முழுமையாகவும் பகுதி அளவிலும் சேதமடைந்திருக்கின்றன. 200 வீதிகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 10 பாலங்கள் முழுமையாக சேதம் அடைந்திருக்கின்றன. இந்நிலையில் அனைவரும் சேர்ந்து இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வந்து மீண்டும் தங்களை கட்டி எழுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பல நாடுகள் உதவுவதற்கு முன் வந்திருக்கின்றன. அந்த உதவிகள் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு இந்த நெருக்கடியில் இருந்து வெளியே வரவேண்டும். முக்கியமாக இலங்கையின் மிக முக்கிய நட்பு நாடான இந்தியா முதலாவது சர்வதேச நாடாக இலங்கைக்கு உதவிகளை செய்திருக்கின்றது. மூன்று விமானங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதே போன்று இரண்டு ஹெலிகாப்டர்கள் இலங்கையில் மீட்பு பணிகளில் இந்தியாவின் சார்பாக ஈடுபட்டு இருக்கின்றன. இந்தியாவின் இந்த உதவியானது தற்போது இந்த நெருக்கடி நேரத்தில் மிகத் தீர்க்கமானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கின்றது.

ஒவ்வொரு நெருக்கடியின் போதும் இந்தியா முதலாவது நாடாக இலங்கைக்கு உதவி வருகின்றது. மேலும் பல்வேறு நாடுகள் உதவிகளை வழங்க முன் வந்திருக்கின்றன. இந்த சர்வதேச உதவிகளை சரியான முறையில் ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட மக்களை மக்களை கட்டி எழுப்ப வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை மீள் கட்டி எழுப்ப வேண்டும்.

ஒரு நாடாக, மக்களாக, இந்த நெருக்கடியில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, மீண்டும் வருவோமா என்பதே இப்போது நம்முன் உள்ள பிரதான கேள்வியாகும். இந்த மக்களின் கதைகளை வெளிக்கொண்டு வருவதும், அவர்கள் அடைந்த இழப்புகளையும், மீண்டு வந்த விதத்தையும் ஆவணப்படுத்துவதும் அவசியமாகும். எப்படி நாங்கள் மீண்டு வரப் போகிறோம் என்பதிலேயே எமது அடுத்த கட்டம் தங்கி இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.