போதைப்பொருளுக்கு அடிமையானவர் குற்றவாளி அல்ல ; சிகிச்சை பெற வேண்டிய நோயாளி!
(ஸ்டெப்னி கொட்பிறி)
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களும் மனிதர்களே. அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்து தனிமைப்படுத்துவது அல்ல; புனர்வாழ்வின் பின்னர் அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைத்து வாழ வழிவகுப்பதே ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமாகும். இதனைச் செய்யத் தவறும்போது, புனர்வாழ்வு பெற்றவர்களே மீண்டும் போதைப்பொருள் வலையில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உருவாகும் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் (National Dangerous Drugs Control Board) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளரும், ஜனாதிபதியின் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் தேசிய செயற்பாட்டு குழு உறுப்பினருமான எம்.எம்.ஜீ.பீ.எம். ரஸாட் வலியுறுத்துகிறார்.
போதைப்பொருள் அடிமை ஒரு நோய்
“சமூகம் விளங்கிக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான உண்மை என்னவென்றால், போதைப்பொருள் அடிமைத்தனம் என்பது ஒரு நோய். இது திரும்பத் திரும்ப வரக்கூடிய, நீடித்த நோயாகும். எனவே போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை குற்றவாளிகளாக அல்ல; நோயாளிகளாகப் பார்த்து, சிகிச்சை அளித்து குணப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் எம்.எம்.ஜீ.பீ.எம். ரஸாட்.
போதைப்பொருள் அடிமையிலிருந்து குணமடைந்தவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தால், அவர்கள் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மனிதன் என்பது கூட்டாக வாழும் ஒரு சமூகப் பிராணி. சமூக ஒப்புதலும், ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் என்ற உணர்வுமே ஒருவரை மீண்டும் சீரான வாழ்க்கைக்குத் திரும்பச் செய்கின்ற முக்கிய காரணிகளாகும்.
“முழு நாடுமே ஒன்றாக” – தேசிய முயற்சி
இலங்கையில் போதைப்பொருள் பிரச்சினை தீவிரமடைந்து வரும் சூழலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் 2025 ஒக்டோபர் 30 முதல் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025.10.30 முதல் 2025.12.18 வரையிலான காலப்பகுதியில் 48,085 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், 47,703 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 1,130 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டு, புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இது, அரசு போதைப்பொருள் அடிமைத்தனத்தை குற்றமாக மட்டுமல்ல; ஒரு சுகாதாரச் சிக்கலாகவும் அணுகுகிறது என்பதைக் காட்டுகிறது.
சமூக ஒதுக்கலின் ஆபத்து
போதைப்பொருள் அடிமைத்தனம், வரலாற்று ரீதியாகவே சமூகத்தாலும், மதத்தாலும் வெறுக்கப்பட்ட ஒன்றாக பார்க்கப்பட்டு வந்துள்ளது. இதன் விளைவாக, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களும் “தீயவர்கள்” எனப் பெயரிடப்பட்டு சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர்.
“முன்னைய காலத்தில் தொழுநோயாளர்களையும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தினோம். ஆனால் அது ஒரு நோய் என்றும், அதற்கு மருந்து இருப்பதாகவும் தெரியவந்தபின், அவர்களை சமூகத்துடன் இணைத்து சிகிச்சை அளிக்கத் தொடங்கினோம். அதுபோலவே, போதைப்பொருள் அடிமையையும் நோயாகக் கருதி, புனர்வாழ்வு வழங்க வேண்டும்” என்கிறார் எம்.எம்.ஜீ.பீ.எம். ரஸாட்.
புனர்வாழ்வு பெற்றவர்களை “குடிகாரன்”, “கஞ்சாக்காரன்” போன்ற சொற்களால் அழைப்பது, அவர்களின் மனநலத்தை கடுமையாக பாதிக்கக்கூடும். இதனால் அவர்கள் மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளது.
குடும்பத்தின் பங்கு மிக முக்கியம்
போதைப்பொருள் அடிமையிலிருந்து குணமடைந்த ஒருவருக்கு குடும்பத்தின் அரவணைப்பு மிக முக்கியமானது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, அன்புடன் ஆதரவு வழங்கும் போது, அந்த நபர் மீண்டும் போதைப்பொருள் பக்கம் திரும்பாமல் இருப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
மனிதனுக்கு உணவு, நீர், பணம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு அப்பால், பாதுகாப்பு, அங்கீகாரம், அன்பு மற்றும் சமூகத்தில் ஒரு இடம் என்பனவும் அவசியமான தேவைகளாகும். இவை புறக்கணிக்கப்படும் போது, ஒருவர் உளவியல் ரீதியாக சிதைவடைந்து மீண்டும் போதைப்பொருளை நாடும் நிலை உருவாகலாம்.
சமூக பொறுப்பு
போதைப்பொருள் இல்லாத நாட்டை கட்டியெழுப்புவது அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் பொறுப்புமாகும். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை ஒதுக்காமல், அவர்களுக்கு உதவி செய்ய முன்வருவதே ஒரு சிறந்த சமூகத்தின் அடையாளமாகும்.
இதற்காக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை 1927 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டு, புனர்வாழ்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் பொதுமக்களும் பங்களிக்க முடியும்.
போதைப்பொருள் அடிமை என்பது ஒரு நோய்; அதை குணப்படுத்த முடியும். குற்றம் செய்த மனிதனை அல்ல, திருந்த விரும்பும் மனிதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். புனர்வாழ்வுக்குப் பிந்தைய சமூக ஏற்றுக்கொள்ளலே, போதைப்பொருள் இல்லாத இலங்கையை உருவாக்கும் முக்கிய விசையாகும்.