பிரேசிலும் இலங்கையும் சொல்லும் அரசியல் பாடம்!
பிரேசிலில் லூயிஸ் இனாசியோ லூலா த சில்வாவின் அரசியல் வெற்றியும், இலங்கையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னிறுத்தும் அரசியல் மாற்றமும், மக்கள் எதிர்பார்ப்புகள், சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறல் குறித்த விவாதங்களை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவருகின்றன.
பணபலம், ஊடக ஆதிக்கம், இனவாதம், மதவாதம் மற்றும் தனிநபர் அவதூறுகளை அரசியல் ஆயுதங்களாகப் பயன்படுத்தி மக்களின் தீர்ப்பை மாற்றிவிடலாம் என நம்பும் சக்திகளுக்கு ஜனநாயகம் வழங்கும் பதில் தெளிவானது: மக்களின் நம்பிக்கையை நிரந்தரமாக அடக்கிவைக்க முடியாது. அதிகாரம் என்பது ஒரு சில குடும்பங்களின் பரம்பரைச் சொத்தல்ல; அது மக்களால் வழங்கப்படும் பொறுப்பு. இந்த அடிப்படை உண்மையையே இடது சாரிச் சிந்தனையும், சமூக சமத்துவத்தை முன்னிறுத்தும் அரசியலும் வலியுறுத்துகின்றன.
பிரேசிலில் நான்காவது முறையாக லூலாவின் அரசியல் வெற்றி, சமூகத்தின் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், சமூக ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்தல் போன்ற இலக்குகளை முன்னிறுத்தும் அரசியலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நிலையில், பிரேசிலின் வெற்றி குறித்த தனது கருத்தினைத் தெரிவித்த பிமல் ரத்நாயக்க, பணவலிமை, ஊடக ஆதிக்கம், இனவாதம் மற்றும் தனிநபர் அவதூறுகளுக்கு எதிராக மக்களின் அரசியல் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் ஊழல், பிரிவினைவாதம், உண்மைக்குப் புறம்பான அரசியல் மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கம் என்பன தோற்கடிக்கப்பட்ட பொல்சனாரோவின் மீதான விமர்சனங்களுடன் லூலாவின் வெற்றியை மனதார வரவேற்றுள்ளார்.
மேலும், சர்வாதிகாரத்தையும், இனவாதத்தையும் வீழ்த்தக் கூடிய இடதுசாரிக் கொள்கையானது இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் பூரண ஆதரவுடன் களமிறங்கிய ஜெயிர் பொல்சனாரோவை தோற்கடித்த வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது. பிரேசிலில் ஜனநாயகத்தின் பக்கம் மக்கள் திரண்டெழுந்து மீண்டும் அதிகப் பெரும் பான்மை இடதுசாரிக் கொள்கைக்கு கிடைத்திருப்பது மக்களின் தெரிவு இடது சாரிச் சமத்துவக் கொள்கையின் பக்கமே இருக்கின்றது என்ற உண்மையை வெளிக்காட்டியுள்ளது.
அதேபோன்று, இலங்கையில் 2024ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையின் பின்னணியிலும் பழைய அரசியல் கலாசாரத்திலிருந்து விடுபட்டு, ஊழலற்ற நிர்வாகத்தையும், பொறுப்புக்கூறலையும் சமத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுவாக இருந்தது. தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பயணம் இந்த எதிர்பார்ப்புகளுடன் இணைந்தே பார்க்கப்படுகின்றது.
இடதுசாரி அரசியலின் உண்மையான வலிமை வெறுமனே தேர்தலில் வெற்றி பெறுவதில் இல்லை. செல்வமும் அதிகாரமும் ஒரு குறிப்பிட்ட தரப்பினரிடம் மட்டுமே குவிவதைத் தடுப்பதிலும், உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், கல்வி மற்றும் சுகாதார வாய்ப்புகளை அனைவருக்கும் உறுதிப்படுத்துவதிலும், சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக நடத்துவதிலுமே அதன் உண்மையான அர்த்தம் இருக்கின்றது.
மக்களின் வாக்குகளால் அதிகாரத்திற்கு வரும் அரசாங்கம், அந்த மக்களின் துயரங்களையும் எதிர்பார்ப்புகளையும் தனது ஆட்சியின் மையமாகக் கொள்ள வேண்டும். இந்தக் கொள்கைதான் இலங்கையில் தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் புதிய அரசியல் கலாசாரத்தின் முக்கிய அடித்தளமாகும்.
இலங்கையில் ஞானசார தேரரின் விடுதலையைக் கோரி கசப்ப தேரர் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த போராட்டம், சட்டத்தின் ஆட்சி தொடர்பான விவாதத்தை மீண்டும் சமூகத்தின் முன்னால் கொண்டுவந்துள்ளது. ஒரு நபர் மதத் தலைவராக இருந்தாலும், அரசியல் செல்வாக்கைக் கொண்டவராக இருந்தாலும் அல்லது பெரும்பான்மைச் சமூகத்தின் ஆதரவைப் பெற்றவராக இருந்தாலும், அவருக்கெனத் தனியான சட்டம் இருக்க முடியுமா என்பதே இங்கு எழும் அடிப்படைக் கேள்வியாகும்.
ஒரு ஜனநாயக நாட்டில் நீதிமன்றத் தீர்ப்புகளையும்,சட்ட நடைமுறைகளையும் மதிப்பது அனைவரினதும் கடமையாகும். ஒருவரின் மத அடையாளம், சமூகப் பின்னணி அல்லது அரசியல் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் நீதியை மாற்றியமைக்க முடியாது. சட்டம் அனைவருக்கும் ஒரே அளவுகோலாக இருக்க வேண்டும். இந்தக் கோட்பாடு பௌத்த பிக்குகளுக்கும், இந்து மதத் தலைவர்களுக்கும், இஸ்லாமிய அறிஞர்களுக்கும், கிறிஸ்தவ மத குருமார்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், சாதாரண குடிமக்களுக்கும் சமமாகப் பொருந்த வேண்டும்.
இலங்கையின் கடந்தகால அரசியல் வரலாற்றில் இனவாதமும் மதவாதமும் பல சந்தர்ப்பங்களில் மக்களின் உணர்வுகளைத் தூண்டுவதற்கும், அரசியல் ஆதரவைத் திரட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிங்கள மக்களின் பாதுகாப்பு என்ற பெயரிலும், தமிழ் மக்களின் உரிமைகள் என்ற பெயரிலும், முஸ்லிம் மக்களின் இருப்பைப் பாதுகாப்பது என்ற பெயரிலும் அச்சத்தையும், சந்தேகத்தையும் வளர்க்கும் அரசியல் அணுகுமுறைகள் சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையைப் பாதித்துள்ளன. அதன் விளைவுகளைச் சாதாரண மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்துள்ளனர்.
இனவாத அரசியலின் மிகப்பெரிய பாதிப்பு என்னவென்றால், மக்களின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதாகும். வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்பின்மை, கல்வியின் தரம், சுகாதார வசதிகள், கிராமிய அபிவிருத்தி, ஊழல் மற்றும் அரச வளங்களின் முறையற்ற பயன்பாடு போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டிய நேரத்தில், இன மற்றும் மத அடையாளங்களை முன்னிறுத்தும் அரசியல் மக்களைப் பிரிவுகளாகப் பிரிக்கின்றது. இதனால் பயனடைவது சாதாரண மக்களல்ல; அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் அரசியல் சக்திகளே.
தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் இலங்கையர் என்ற பொதுவான அடையாளமும், ஊழலற்ற நிர்வாகம் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் என்ற கொள்கைகளும் இந்தப் பிரிவினை அரசியலுக்கு மாற்றாக அமையக்கூடியவை.
சிங்களவர், தமிழர், முஸ்லிம் எனப் பிரிந்து நிற்பதற்குப் பதிலாக, அனைவருக்கும் சம உரிமைகளும், சம வாய்ப்புகளும் உறுதிப்படுத்தப்படும் நாட்டை உருவாக்குவதே ஜனநாயக அரசியலின் உயர்ந்த இலக்காக இருக்க வேண்டும். எந்த மதத்தையும் அவமதிக்காமல், எந்த இனத்தையும் அச்சுறுத்தாமல், அனைத்து மக்களினதும் உரிமைகளையும் பாதுகாக்கும் அரசியலே நாட்டின் நீண்டகால ஒற்றுமைக்கு அடித்தளமாக அமையும்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளும் அரசியல் மீதான மக்களின் நம்பிக்கையின்மையும் ஒரே நாளில் உருவானவை அல்ல. பல தசாப்தங்களாகப் பேணப்பட்ட அரசியல் நடைமுறைகள், பொறுப்பற்ற நிர்வாகம், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரம் ஒரு சில தரப்பினரிடம் குவிந்தமை போன்றவை மக்களின் அதிருப்தியை அதிகரித்தன.
2024ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்தின் பின்னணியில், பழைய தவறுகள் மீண்டும் நிகழக்கூடாது என்ற மக்களின் எதிர்பார்ப்பு வலுவாக இருந்தது.அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.
ஊழலுக்கு எதிரான பேச்சுகள் மட்டுமல்லாமல், குற்றச்சாட்டுகள் தொடர்பான சுயாதீன விசாரணைகள், வெளிப்படையான நிர்வாகம், அரச வளங்களின் பொறுப்பான பயன்பாடு மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவற்றின் மூலம் மாற்றம் நிரூபிக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்திற்கு ஆதரவானவராக இருந்தாலும் எதிர்ப்பவராக இருந்தாலும், சட்ட மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஒரே தரத்திலான நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசியல் பழிவாங்கலுக்கும் சட்டபூர்வமான பொறுப்புக்கூறலுக்கும் இடையிலான வேறுபாடு தெளிவாகப் பேணப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி தெளிவான கொள்கையுடன் செயற்பட்டு வருகின்றார். பிரேசிலின் அரசியல் அனுபவமும் இலங்கையின் புதிய அரசியல் பாதையும் நினைவூட்டும் முக்கியமான உண்மை ஒன்றுதான்: எந்த அரசியல் சக்தியும் நிரந்தரமானதல்ல; மக்களின் நம்பிக்கையே அதன் உண்மையான பலம். தேர்தல் வெற்றியைப் பெற்ற பின்னரும் மக்கள் வழங்கிய அதிகாரம் ஒரு பொறுப்பு என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது. அதேபோன்று, தோல்வியடைந்த அரசியல் சக்திகளும் மக்களின் தீர்ப்பை மதித்து, ஜனநாயக வழிமுறைகளின் ஊடாகவே தமது அரசியல் கருத்துகளை முன்வைக்க வேண்டும். லூலாவின் வெற்றியை இடதுசாரிச் சிந்தனை, சமூக நீதி மற்றும் சமத்துவ அரசியல் குறித்த விவாதங்களின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கலாம்.
இலங்கையில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் மாற்றமும் ஊழலற்ற நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, இனங்களுக்கிடையிலான சமத்துவம் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி ஆகியவற்றின் மூலம் தனது பெறுமதியை நிரூபிக்க வேண்டியுள்ளது. இந்த இலக்குகளை அடைவதற்கு அரசாங்கத்தின் உறுதியுடன் மக்களின் விழிப்புணர்வும் தொடர்ச்சியான கண்காணிப்பும் அவசியமாகும். ஞானசார தேரர் விவகாரமாக இருந்தாலும், ஊழல் தொடர்பான விசாரணைகளாக இருந்தாலும், இனவாதத்துக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும், அடிப்படைக் கொள்கை ஒன்றுதான்: நீதிக்கு மேலாக எவரும் இருக்க முடியாது; மத அடையாளம் சட்டத்திற்கு மாற்மாக முடியாது; அரசியல் அதிகாரம் மக்களின் உரிமைகளை ஒடுக்குவதற்கான கருவியாக மாறக்கூடாது.
மக்களின் கண்ணீரைத் துடைக்காத அதிகாரத்திற்கும், நீதியைச் சமமாக நிலைநாட்டாத ஆட்சிக்கும், ஊழலைத் தடுக்காத அரசியலுக்கும் நிரந்தரமான மக்கள் ஆதரவு கிடைக்காது. மக்கள் வழங்கிய ஆணையை மக்களுக்கான சேவையாக மாற்றும் அரசியலுக்கே வரலாற்றில் நிலையான இடம் கிடைக்கும்.
மக்கள் சக்தியே இறுதி சக்தி! சமத்துவமே ஜனநாயகத்தின் அடித்தளம்! சட்டத்தின் ஆட்சியே நீதியின் பாதுகாப்பு! இந்த மூன்று உண்மைகளையும் நடைமுறையில் நிலை நாட்டுவதில்தான் இலங்கையின் புதிய அரசியல் மாற்றத்தின் வெற்றியும் எதிர்காலமும் தங்கியிருக்கின்றன.