;
Athirady Tamil News

வரலாற்றில் பெரும் தர்மசங்கடம்; இலங்கைக்கு தலைகுனிவை ஏற்படுத்திய விமானப் பணிப் பெண்

0

இலங்கை விமான சேவையின் (SriLankan Airlines) பெண் விமானப் பணியாளர் ஒருவர் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இலங்க்கைக்கு வரலாற்றில் பெரும் சர்வதேச தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள புகழ்பெற்ற ‘ஈயோன்’ (Aeon) வணிக வளாகத்தில் பொருட்களைத் திருடியதாக இலங்கை விமான பணிப்பெண் மீது மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வரலாற்றில் பெரும் தர்மசங்கடம்
நரிட்டா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மற்ற பணியாளர்களுடன் தங்கியிருந்தபோது, இலங்கை விமான பணிப்பெண் தனியாக அந்த வணிக வளாகத்திற்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள பாதுகாப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், அவர் பொருட்களைத் திருடியது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடை ஊழியர்கள் ஜப்பானிய காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். ஜப்பானிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படி, அவர் திருடிய பொருட்களில் ‘ஓனிகிரி’ (onigiri) எனப்படும், ஜப்பானில் மிகவும் பிரபலமான அரிசி சார்ந்த சிற்றுண்டியும் அடங்கும்.

கைது செய்யப்பட்டவர் தெஹிவலா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய விமானப் பணியாளர் ஆவார்.

வெளிநாட்டுப் பயணங்களின் போது, ​​விமானப் பணியாளர்களுக்கு ஹோட்டல் தங்குமிட வசதியுடன், தினசரி உணவுப் படியாக 95 முதல் 100 அமெரிக்க டாலர்கள் வரை வழங்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பது, இலங்கையின் தேசிய விமான சேவைக்கு ஒரு பெரும் களங்கமாகக் கருதப்படுகிறது.

ஜப்பானிய சட்ட நடைமுறைகள் மிகவும் கடுமையானவை
ஜப்பானிய குற்றவியல் சட்டத்தின்படி, விசாரணையின் போது சந்தேக நபர்களை 21 நாட்கள் வரை (சில தகவல்களின்படி 23 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உண்டு. ஜப்பானிய சட்ட நடைமுறைகள் மிகவும் கடுமையானவை. சிறிய அளவிலான திருட்டுக் குற்றங்களுக்குக் கூட, விசாரணை காலத்தில் பிணை கிடைப்பது அரிது.

மேலும், இதில் வெளித் தலையீடுகளுக்கோ அல்லது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்துவதற்கோ எந்த இடமும் இல்லை என்று தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், இலங்கை விமான சேவையின் சில உயர் அதிகாரிகள், ஜப்பானிய அதிகாரிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அந்தப் பணியாளரை விடுவிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய தலையீடு, விமான நிறுவன ஊழியர்களிடையே கடும் அதிருப்தியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, விமானச் செயல்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி இதில் தலையிடுவது குறித்து ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த அதிகாரி மீது ஏற்கனவே பெண் பணியாளர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், தற்போது அவர் மேற்கொள்ளும் இந்த முயற்சி, நிறுவனத்தின் ஒழுக்கத்தையும் தொழில்முறை தரநிலைகளையும் சீர்குலைப்பதாக ஊழியர்கள் கருதுகின்றனர்.

அதேசமயம் இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகமோ அல்லது டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகமோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.