;
Athirady Tamil News

உக்ரைன் மீது தொடர்ந்து 2வது நாளாக ரஷியா தாக்குதல்…!!

0

உக்ரைன் நாடு மீது ரஷியா போர் தொடுக்கும் என்று சில நாட்களாகவே தகவல் வெளிவந்த நிலையில் நேற்று அதிகாலை தனது தாக்குதலை தொடங்கியது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இருக்கும் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா உக்ரைன் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்தது.

இதனால் உக்ரைன் மீது எந்த நேரத்திலும் படை எடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்தது. மேலும் ரஷியா- உக்ரைன் ராணுவத்தினர் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டதால் பதட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

உக்ரைனுக்கு ஆதரவு அளித்த அமெரிக்கா, ரஷியாவை எச்சரித்தபடியே இருந்தது. ஆனால் உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் என்று ஐ.நா. சபை, உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை ரஷியா முற்றிலும் புறக்கணித்து விட்டு உக்ரைன் மீது நேற்று அதிரடியாக போரை தொடங்கியது.

முதலில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் சரமாரியாக வீசப்பட்டன. பின்னர் போர் விமானங்கள் உக்ரைனுக்குள் புகுந்து குண்டு மழை பொழிந்தன. உக்ரைன்-ரஷிய எல்லை, பெலாரஸ் நாடு மற்றும் கிரீமியா தீபகற்பம், ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து உக்ரைன் மீது தாக்குதலில் நடத்தப்பட்டன.

போக்குவரத்து நெரிசல்

தலைநகர் கீவ் மற்றும் முக்கிய நகரங்களான கார்கிவ், டினிப்ரோ, கிராமடோர்ஸ்க, போல்டாவா, ஜபோரிஜிஜியா உள்ளிட்ட நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. அங்குள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது குறி வைக்கப்பட்டு குண்டுகள் வீசப்பட்டன.

விமான நிலையங்கள், துறைமுகங்களை கைப்பற்ற தாக்குதல் நடத்தப்பட்டன.

அதே போல் புரோவாரி, ஒடேசா, துறைமுக நகரான மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் உக்ரைனின் 80-க்கும் மேற்பட்ட ராணுவ கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

மேலும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகமும் தரைமட்டமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.

ரஷியாவின் அதிரடி தாக்குதலில் உக்ரைன் நாடு நிலைகுலைந்து போனது. தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டதால் மக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தனர். பலர் வீடுகள் அருகே அமைக்கப்பட்ட பதுங்கு குழிகளில் பதுங்கினர்.

அதே போல் மெட்ரோ ரெயில் சுரங்க பாதைகளில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்தனர். வீடுகளில் குண்டுகள் விழுந்து விடுமோ என்ற பயத்தில் பலர் வெளியேறினர். அவர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்தனர். இதனால் தலைநகர் கீவ் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உக்ரைனில் ராணுவ நிலைகள் மீது மட்டும்தான் தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும், குடியிருப்பு பகுதிகளில் குண்டுகள் வீசப்பட வில்லை என்றும் ரஷிய ராணுவம் தெரிவித்தாலும் அங்குள்ள பல வீடுகள் குண்டு வீச்சில் சேதம் அடைந்தன. இதனால் மக்கள் கடும் பீதியில் உறைந்தனர்.

நேற்று அதிகாலை தொடங்கிய தாக்குதலை ரஷியா இடை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தியது. இரவிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷியாவின் ஆக்ரோச தாக்கு தலை உக்ரைன் ராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை.

இதனால் பல இடங்களில் உக்ரைன் ராணுவத்தினர் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது. உக்ரைன் மீது 3 மணியில் இருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த நாடு முற்றிலும் செயலிழந்தது. இதனால் ரஷிய படை வீரர்கள் எளிதாக உக்ரைனுக்குள் நுழைந்தனர்.

குறிப்பாக தலைநகர் கீவ்வை கைப்பற்ற அவர்கள் தீவிரம் காட்டினர். கீவ் நகரை நோக்கி ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியபடி முன்னேறியது. அவர்களுக்கு உதவியாக வான்வெளி தாக்குதலும் நடத்தப்பட்டது.

ரஷியாவின் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் பலியாகி உள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.

இரவு முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று 2-வது நாளாகவும் ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசியது. தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷியா தீவிரமாக உள்ளதால் இன்று அதிகாலை அந்த நகரை குறி வைத்து தொடர்ச்சியாக ஏவுகணைகள் வீசப்பட்டன.

அந்த நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் கீவ் நகரை நோக்கி முன்னேறும் ரஷிய படைகள் அதனை கைப்பற்ற நெருங்கி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் விரைவில் உக்ரைன் தலைநகர் ரஷிய படையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு விடும் என்று தெரிகிறது. கீவ் நகரில் உள்ள முக்கிய அரசு கட்டிடங்கள், விமான நிலையம் ஆகியவை ரஷிய படையிடம் சென்று விடும் என்ற சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். உணவு, தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் அவர்கள் சுரங்கப் பாதைகளிலேயே தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள்.

கீவ்வை போலவே மற்ற நகரங்களையும் ரஷிய படை சுற்றி வளைத்து இருக்கிறது. அங்கும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய அணுஉலை நிலையத்தையும் ரஷியா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.

இதனால் உக்ரைன் நாடு முழுவதையும் விரைவில் ரஷியா கைப்பற்றி விடும் நிலை உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.