;
Athirady Tamil News

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்!!

0

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அதன் தலைவர் மசட்சுகு அசகாவா (Masatsugu Asakawa), இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் தெரிவித்தார்.

நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மசட்சுகு அசகாவா இவ்வாறு தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் தனியார் துறையின் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் தலைவர் தெரிவித்தார். ஆசிய அபிவிருத்தி வங்கி, கடந்த வருடம் 750 மில்லியன் டொலர் சலுகைக் கடன்களை வழங்கியது. இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு 02 பில்லியன் டொலர் கடன் உதவி ஒதுக்கப்படும் என்று மசட்சுகு அசகாவா குறிப்பிட்டார்.

கொவிட் தொற்றுப்பரவல் காரணமாக பின்னடைவைச் சந்தித்த இலங்கையின் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்கும், மனித வள அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

கொவிட் தொற்றுநோயின் விளைவுகளைத் தணிக்க, இலங்கைக்கு கிட்டத்தட்ட 600 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கியதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

பசுமை விவசாயம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி மற்றும் கைத்தொழில் வலயங்களில் நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

மொத்த வலுசக்தி உற்பத்தியில் 70 சதவீதங்களைப் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து பெறுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது வருடாந்த மாநாடு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. இதற்காக இலங்கையைத் தெரிவு செய்தமை தொடர்பில் மகிழ்ச்சியைத் தெரிவித்த ஜனாதிபதி, அதனைச் சிறப்பாக நடத்துவதற்கு தாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.