;
Athirady Tamil News

‘எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பை ராணுவம் அனுமதிக்காது’ – வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் திட்டவட்டம்..!!

0

கிழக்கு லடாக்கை தொடர்ந்து அருணாசல பிரதேசத்தில் நடந்துள்ள சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இந்தியாவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் சீனாவுடனான எல்லைப்பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இந்திய ராணுவம் அனுமதிக்காது என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார். டெல்லியில் நடந்த இந்தியா-ஜப்பான் கருத்தரங்கில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எல்லையில் படை குவிப்பு
சீன எல்லையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான ராணுவத்தை குவித்திருக்கிறோம். 2020-ம் ஆண்டு முதல் சீனா குவித்து வரும் படைகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இந்த படைக்குவிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாங்கள் சொன்னதால்தான் ராணுவம் அங்கு சென்றிருக்கிறது. ராகுல் காந்தி போகச் சொன்னதால் ராணுவம் அங்கு செல்லவில்லை. இந்திய பிரதமர் அவர்களைப் போகச் சொன்னதால் ராணுவம் அங்கு சென்று இருக்கிறது.

ராணுவத்தின் கடமை
அசல் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் நிலவும் இயல்பு நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றும் எந்த முயற்சியையும் முறியடிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. அங்கு சீனாவின் ஆக்கிரமிப்பை அனுமதிக்கக்கூடாது என்பதில் ராணுவம் உறுதியாக இருக்கிறது. எல்லையில் அத்துமீற எந்த நாட்டையும் அனுமதிக்க மாட்டோம் என்பது இந்திய அரசின் கடமை மற்றும் இந்திய ராணுவத்தின் கடமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகும்.

சீன பொருட்கள் இறக்குமதி
இந்த பரபரப்பான சூழலில் சீனாவில் இருந்து ஏன் இறக்குமதிகள் அனுமதிக்கப்படுகின்றன? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் உற்பத்தித் துறையில் போதிய கவனம் செலுத்தாததால் அந்த நாட்டிலிருந்து இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்கிறது. 30 ஆண்டுகளாக உங்கள் தொழிலுக்கு கொடுக்க வேண்டிய ஆதரவையும், பாதுகாப்பையும் நீங்கள் கொடுக்கவில்லை. இப்போதுதான் நீங்கள் அதைச் செய்யத் தொடங்கி இருக்கிறீர்கள். 30 ஆண்டுகளில் செய்ததை இப்போது 5 அல்லது 10 ஆண்டுகளில் மாற்ற முடியாது என்று ஜெய்சங்கர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.