;
Athirady Tamil News

மகா சிவராத்திரி: காளஹஸ்தி சிவன் கோவிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து!!

0

திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கியது. மகா சிவராத்திரி விழாவின் 2-வது நாளான நேற்று வெள்ளி பல்லக்குகளில் சாமி, அம்மையார் 4 மாட வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து வருகிற 26-ந் தேதிவரை விழா நடக்கிறது. மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடக்கும் 13 நாட்களும் தினந்தோறும் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் ஊர்வலம் நடைபெறும். மகாசிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு நகரை அழகுப்படுத்தியுள்ளனர். சாமி ஊர்வலத்திற்கு முன்னதாக சாலைகளை தூய்மைப் படுத்தி, தண்ணீரை தெளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

அப்போது மூலவரின் சேவையை விட உற்சவமூர்த்திகள் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால் மகாசிவராத்திரி நடைபெறும் 26-ந்தேதி வரை கோவிலில் நடக்கும் ருத்ராபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், பச்சை கற்பூர அபிஷேகம் ரத்து செய்யப்படுவதோடு, கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகிறது. வழக்கமாக பிரம்மோற்சவத்தின் போது இரண்டு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகளான சுவாமி, அம்பாள் 4 மாட வீதிகளில் வீதிஉலா வருகின்றனர். அப்போது பக்தர்களை அபிஷேகங்களில் அனுமதித்தால் கால நிர்வாகம் செய்ய இயலாது என்பதால் பக்தர்களை அனுமதிக்காமல் கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகிறது.

ஆனால் பக்தர்கள் மிகவும் பக்தி பாவசத்துடன் ஈடுபடும் ராகு, கேது, சர்ப்பதோஷ நிவாரண பூஜைகள் வழக்கம் போல் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் நடக்கும் என்றும், இப்பூஜைகள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.