;
Athirady Tamil News

சீமான் கைது செய்யப்பட வேண்டும்.. வன்கொடுமை சட்டம் பாய வேண்டும்.. எஸ்பியிடம் தலித் அமைப்புகள் புகார் !! (படங்கள்)

0

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை தூய்மை பணிக்கு விஜயநகர பேரரசு ஆந்திராவிலிருந்து அழைத்து வந்ததாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவாகரத்தில் சீமானை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என 10 க்கும் மேற்பட்ட தலித் அமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு வாக்கு சேகரிக்க நாம் தமிழர் கட்சியினர் ஈரோட்டில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

வியாழக்கிழமை சீமான் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “விஜயநகர பேரரசு நிறுவிய பிறகு உங்கள் மன்னர்களுக்கு செய்ததை போல் எங்களுக்கு பட்டாடை செய்து கொடுங்கள் என்று கேட்டார்கள். வேறு ஆளை பாருங்கள் என்று அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் குஜராத்தில் இருந்து சவுராஷ்டிராக்களை இந்த விஜயநகர மன்னர்கள் இறக்கினார்கள்.


ஆந்திராவில்

கடைசியாக இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். அதைப்போல எங்கள் ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போட வேற ஆளை பாரு! என்றார்கள். வேறு வழியில்லாமல் ஆதிக்குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள். தன் மானம் மிக்கவர்கள் தமிழர்கள். ஜாதியை சொல்லி வாக்கை குறைத்துவிட முடியாது. இந்த தமிழ்நாடு நூலிழையில் தவறு பண்ணிருச்சு. அண்ணாவிற்கு பிறகு நெடுஞ்செழியனிடம் போயிருந்தால் தமிழ்நாடு உருப்பட்டிருக்கும். நாமும் உருப்பட்டிருப்போம். நாங்கெல்லாம் கட்சி ஆரம்பிச்சிருக்க மாட்டோம். கடைசி வரை ஒரே மனைவியுடன் வாழ்ந்த தலைவன் நெடுஞ்செழியன் தான்” இவ்வாறு சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

ஆதாரமே இல்லை

சீமானின் இந்த பேச்சுக்கு தமிழ் புலிகள் முத்துக்குமார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அருந்ததி மக்கள் வந்தேறிகள் என்பதை சீமான் நேரடியாக சொல்லி இருக்கிறார்கள். விஜயநகர பேரரசிடம் முதலியார்கள் மறுத்ததற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? எந்த புத்தகத்தில் படித்தேன் என்பதை சொல்லவே மாட்டார். ஏனென்றால் சீமான் பேசுவதற்கு ஆதாரமே இருக்காது.

பாஜக டார்க்கெட்

ஜாதி ரீதியாக பிளவு ஜாதி ரீதியாக பிளவு வாய்க்கு வந்ததை உளறுவதே சீமானின் வேலை. ஓட்டுக்காக ஒரு சமூக மக்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்தும் வேலையை செய்பவர்தான் சீமான். ஒடுக்கப்பட்ட பள்ளர் சமூகத்தினரை உயர்ந்தவர்கள் என்று சொல்லி, இந்துத்துவா, பாஜக டார்கெட்டிற்குள் அவர்களை கொண்டு வந்து சேர்க்கும் வேலையைதான் முதலியார்கள் சமூகத்திலும் அவர் செய்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் அஜெண்டா

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது. அவர்கள் அடித்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கொடுத்த அஜெண்டாவை செய்து வருகிறார் சீமான். தென்னிந்திய கல்வெட்டுகள் 7வது தொகுதி 49 வது பக்கத்தில் ஒரு பாடல் உள்ளது. அந்த பாடல் இப்போது திரித்து கூறப்பட்டு உள்ளது. விஜயநகர பேரரசு தமிழ்நாட்டுக்கு வந்தது 1500 க்கு பின்னால் தான்” இவ்வாறு கூறினா.

எஸ்பியிடம் புகார்

இதனிடையே சர்ச்சைக்குரிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை தூய்மை பணிக்கு விஜயநகர பேரரசு ஆந்திராவிலிருந்து அழைத்து வந்ததாக பேசியதாகவும், பூர்வகுடி தமிழர்களாக வாழ்ந்து வரும் அருந்ததியர் இன மக்களை அவரது பேச்சு இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அருந்ததியினர் கூட்டமைப்பு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தலித் அமைப்பினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்திருக்கிறார்கள்

வன்கொடுமை சட்டம்

அவர்கள் தங்கள் மனுவில், தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசிய சீமான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து ஈடுபட அவருக்கு தடை விதிப்பதுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் வலியுறுத்தினர். இதே போல் சீமான் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர், இதனிடையே சீமான் மீது நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்து பிரச்சாரத்திற்கு வரும்போது அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் தலித் அமைப்பினர் எச்சரித்துள்ளார்கள்.

தெலுங்கு வந்தேறிகள் என சீமான் பேச்சு- ஈரோடு கிழக்கு நாம் தமிழர் வேட்பாளரை விரட்டியடித்த அருந்ததியர்!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.