;
Athirady Tamil News

பாராளுமன்றம் முடக்கத்துக்கு காரணம் யார்? பா.ஜ.க., காங்கிரஸ் பரஸ்பரம் குற்றச்சாட்டு!!

0

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கியது. ஆனால் இங்கிலாந்தில் ராகுல் காந்தி நாட்டுக்கு விரோதமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வும், அதானி நிறுவனங்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுட்டு வருவதால், சபைகள் முடங்கி வருகின்றன.

இது தொடர்பாக மாநிலங்களவை அவை முன்னவரான மத்திய மந்திரி பியூஷ் கோயல் (பா.ஜ.க.) கருத்து தெரிவித்துள்ளார். அவர், “பிரதமர் மோடியின் தலைமைக்கு உலகமே அங்கீகாரம் அளித்துள்ளது. அனால், பொறுப்பற்ற வகையில் கருத்துகளைக்கூறியும், அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தும் நாட்டை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தவறாக வழிநடத்தி, பாராளுமன்றத்தை வேண்டுமென்றே முடக்கி வருகிறது” என சாடினார். இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:- மாநிலங்களவை தலைவர் அழைப்பு விடுத்த கூட்டத்தை எதிர்க்கட்சி புறக்கணித்துள்ளதாக பியூஷ் கோயல் குற்றம்சாட்டி உள்ளார். அவைத்தலைவர் இருமுறை அனுமதி கொடுத்தும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரை தனது கட்சி எம்.பி.க்களைக் கொண்டு பேச விடாமல் தடுத்த அவை முன்னவரிடம் இருந்து இந்த குற்றச்சாட்டு வந்திருக்கிறது. அதானி விவகாரத்தில் பாராளுமன்ற விசாரணை கோருவது ஒரு பிரச்சினை என்றால் எதிர்க்கட்சி தலைவரைப் பேசவிடாமல் வாய் அடைப்பது மற்றொரு பிரச்சினை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மற்றொரு பதிவில் ஜெய்ராம் ரமேஷ், “பிரதமருடன் தொடர்புடைய அதானி ஊழலில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்கும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கும், அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறி அதற்காக ராகுல் காந்தியின் மன்னிப்பை கோரும் பா.ஜ.க.வின் கோரிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அதானி ஊழலில் இருந்து இது கவனத்தை திசை திருப்புவதாகும்” என சாடி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.