;
Athirady Tamil News

அம்ரித்பால் சிங் சட்ட நடவடிக்கையை சந்தித்தே ஆக வேண்டும்: பஞ்சாப் முதல்வர் கருத்து!!

0

பிந்தரன்வாலேவுக்கு பிறகு பஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கையை முன்னெடுத்தவர் அம்ரித்பால் சிங். நேற்று அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக நடந்து வந்த போலீசாரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது. இவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:- 35 நாட்களுக்கு பிறகு அம்ரித்பால் சிங் இன்று (நேற்று) கைது செய்யப்பட்டு விட்டார்.

அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க முயற்சித்து, நாட்டின் சட்டத்தை மீறியவர், சட்டப்படியான நடவடிக்கையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். நாங்கள் எந்த அப்பாவி மனிதரையும் தொல்லைப்படுத்த மாட்டோம். நாங்கள் பழிவாங்கும் அரசியல் செய்யவும் இல்லை. கடந்த 35 நாட்களாக மாநிலத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைப்பிடித்து வந்ததற்காக பஞ்சாபின் 3½ கோடி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். அம்ரித்பால் சிங்கின் கடந்த காலம் பற்றிய முக்கிய தகவல்கள்:- அம்ரித்பால் சிங்கின் முழுப்பெயர் அம்ரித்பால் சிங் சந்து ஆகும். இவர் 1993-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி பிறந்தவர். அமிர்தசரஸ் மாவட்டத்தில் வளர்ந்தவர். இவர், தனது பெற்றோருக்கு 3-வது மகன் ஆவார். அவரது குடும்பம், சீக்கிய மதத்தில் தீவிரமான பற்று கொண்டதாகும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து, படிப்பை பாதியில் நிறுத்தியவர்.

2012-ல் துபாய்க்கு சென்று தனது குடும்பத்தாரின் போக்குவரத்து தொழிலில் இணைந்தார். 10 ஆண்டுகளுக்கு பின்னர் நாடு திரும்பியவர் தன்னை மத பிரசாரகராக அறிவித்துக்கொண்டு, பிரசாரம் செய்தார். பிந்தரன்வாலேயின் ஆதரவாளராக தன்னை பிரகடனம் செய்ததோடு மட்டுமின்றி, இரண்டாம் பிந்தரன்வாலே என்று சொல்லக்கூடிய வகையில் விசுவரூபம் எடுத்து காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கையை கையில் எடுத்தார். அதன் விளைவுதான் இப்போது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிற அளவுக்கு அவரைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.