கடுமையான பதிலடி கொடுக்கப்படும் ; கடும் சீற்றத்தில் ட்ரம்ப்
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ராணுவ வீரர்கள் கொலை
சிரியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர், ஒரு மொழிப்பெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர்.
மேலும் வீரர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷரா, வெள்ளை மாளிகையில் சில வாரங்களுக்கு முன் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, ஐஎஸ் அமைப்புக்கு எதிராக நடவடிக்கை சிரியா, அமெரிக்கா ஆகிய இருநாட்டு தலைவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதாவது: எங்கள் மீதும், சிரியா மீதும் ஐஎஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இதற்கு நாங்கள் பதிலடி தருவோம். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வருகின்றனர். இவ்வாறு டிரம்ப் கூறினார்.