;
Athirady Tamil News

உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல ரவுடிகள் முக்தாருக்கு 10 ஆண்டு, அப்சல் எம்.பி.க்கு 4 ஆண்டு சிறை!

0

உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம் முகமதாபாத் சட்டப் பேரவைத் தொகுதியில் பிரபல ரவுடி முக்தார் அன்சாரி குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த 2002-ம் ஆண்டு முகமதாபாத் தொகுதி தேர்தலில் முக்தார் அன்சாரியின் அண்ணன் அப்சல் அன்சாரி போட்டியிட்டார். ஆனால், பாஜக வேட்பாளர் கிருஷ்ணானந்த் ராய் வெற்றி பெற்றார்.

அதன்பின் கடந்த 2005 நவம்பர் 29-ம் தேதி கிருஷ்ணானந்த் ராய் உட்பட 7 பேர் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக முக்தார், அப்சல் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. வழக்கில் ஒரே சாட்சியான சசிகாந்த் ராய் மர்மமான முறையில் உயிரிழந்தார். போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 2019-ல் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், 1997-ம் ஆண்டில் விஎச்பி மூத்த தலைவரும் தொழிலதிபருமான நந்த் கிஷோர் ரங்தா கொலை வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டில் முக்தாார், அப்சல் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் முக்தார் மாவ் தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக இருந்தவர். இவர் மீது 61 வழக்குகள் உள்ளன. அப்சல் தற்போது காஜிபுர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி எம்பியாக உள்ளார்.

இருவர் மீதான வழக்கையும் காஜிபுரில் உள்ள எம்பி, எம்எல்ஏ நீதிமன்றம் விசாரித்து, ரவுடி முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. அப்சல் அன்சாரி எம்.பி.க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஒரு மாதத்துக்குள் மேல் முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி இழப்பர். அந்த வகையில் அப்சல் எம்பி பதவி தகுதியை இழக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.