;
Athirady Tamil News

கேரளாவில் கனமழைக்கு 135 வீடுகள் சேதம்- சிறப்பு முகாம்களில் 900 பேர் தஞ்சம்!!

0

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்கிறது. பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லார்குட்டி மற்றும் பாம்பிளா அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருவதால் அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெரியாறு மற்றும் முத்திரப்புழா ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா மாவட்டத்தில் கரிக்கயம், உள்ளுங்கல், மணியார் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் பல இடங்களில் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக கேரளாவில் பல இடங்களில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் சூறைக்காற்று காரணமாக மின்கம்பங்களும் முறிந்தன.

அதுமட்டுமின்றி மலையோர பகுதிகளில் சிறிய நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழையால் பத்தினம்திட்டா மாவட்டத்தில் 130 ஆண்டுகள் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் இடிந்தது. கண்ணூரில் மத்திய சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. கனமழைக்கு மாநிலம் முழுவதும் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். 135 வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகளை இழந்தவர்கள் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் 47 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு 900 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தயாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியவர்களை பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.

கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆலப்புழா, கண்ணூர், கோழிக்கோடு, கோட்டயம், காசர்கோடு, பாலக்காடு, இடுக்கி, திருச்சூர், எர்ணாகுளம், பத்தினம்திட்டா, கொல்லம் ஆகிய 11 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.