;
Athirady Tamil News

போருக்கு இடையில் மனிதாபிமானம்: உக்ரைன் அகதிகளுக்கு உதவும் ரஷியர்கள்!!

0

2022 பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. ரஷியாவில் இப்போர் குறித்து ரஷியாவையோ, அதிபர் விளாடிமிர் புதினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷியாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர். ராணுவ தாக்குதல் காரணமாக ரஷியாவிற்கோ அல்லது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர்.

தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷிய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர். “இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரெயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷியர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை,” என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷிய பெண்மணி தெரிவித்தார்.

“எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்” என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷிய பெண் கூறினார். 2022 டிசம்பர் மாதமே ரஷியாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.