;
Athirady Tamil News

ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் சலுகைகள் ஏராளம்! கோடிகளில் மோசடி செய்த பிரபல நகைக்கடை

0

ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்து மோசடி செய்த பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு பொலிஸார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனம்
தமிழக மாவட்டம் திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா பதவி வகித்து வந்தனர். இந்நிறுவனம், சென்னை, மதுரை, கும்பகோணம், நாகர்கோவில் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வருகிறது.

இந்நிறுவனமானது ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதத்திற்கு இரண்டு சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும், அப்படி இல்லையென்றால் 10 மாதத்திற்கு பிறகு செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்க நகைகளை பெறலாம் என்று கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது. மேலும், 11 மாதம் சீட்டு கட்டினால் 12 -ம் மாத தவணை இலவசம் என்றும் கூறியிருந்தது.

மக்களிடம் மோசடி
இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால், கடந்த மாதம் எந்தவித அறிவிப்பும் இன்றி பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தை மூடியுள்ளது. மேலும், அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்படி, வழக்குப்பதிவு செய்த பொலிஸார் நடத்திய சோதனையில் 11 கிளைகளில் போலி நகைகள் மற்றும் கவரிங் நகைகளை வைத்து பொதுமக்களை மோசடி செய்தது தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல், பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் 100 சவரன் தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகாவிற்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதனிடையே, இந்த நிறுவனமானது ரூ.50 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொலிஸில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.