;
Athirady Tamil News

சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற எந்த முகாந்திரமும் இல்லை: அதானி – ஹிண்டன்பர்க் வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

0

புதுடெல்லி: அதானி – ஹிண்டன்பர்க் வழக்கை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற எந்த முகாந்திரமும் இல்லை என்றும் இவ்வழக்கை பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியே தொடர்ந்து விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விசாரணையை நிறைவு செய்ய செபிக்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஹிண்டன்பர்க் நிறுவனம் விதிகளை மீறி செயல்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசும் செபியும் ஆராய வேண்டும்என்றும் விதிகள் மீறப்பட்டிருக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்றும்,பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு பாதுகாப்பான கட்டமைப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச் சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவைஅமைத்தது.

மேலும், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு செபிக்கு உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையிலான குழு தன்னுடைய அறிக்கையை கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. செபி அதன் அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல்அவகாசம் வழங்கப்பட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸின் ஓசிசிஆர்பி அமைப்பும் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அதற்கான ஆவணங்களை வெளியிட்டது. மேலும், அதானி – ஹிண்டன்பர்க் விவகாரத்தில் செபி முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் அதானிக்கு சாதகமாக செயல்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரிக்க வேண்டும் என்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு இம்மனுக்கள் மீதான தீர்ப்பை நேற்று வெளியிட்டது. அந்த தீர்ப்பில் “ஓசிசிஆர்பி போன்ற அமைப்புகளின் அறிக்கைகளை முறையாக ஆய்வு செய்யாமல் ஆதாரமாக கொள்ள முடியாது. செய்தி நிறுவனங்கள், தனியார் அமைப்புகளின் அறிக்கைகளை ஒரு தகவலாக எடுத்துக்கொள்ளலாமே தவிர, அவற்றை முழுமையான ஆதாரமாகக் கருதி செபியின் விசாரணையை சந்தேகிக்க முடியாது.

செபியின் அதிகார வரம்பில் ஓரளவுக்கு மேல் உச்ச நீதிமன்றம்தலையிட முடியாது. தவிர, ஒரு வழக்கை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற வலுவான நியாயங்கள் தேவை. அந்த வகையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணையை சிறப்பு விசாரணைகுழுவுக்கு மாற்றுவதற்கு எந்தமுகாந்திரமும் இல்லை. இந்தவழக்கை செபியே தொடர்ந்து விசாரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணையை முழுமையாக நிறைவுசெய்ய செபிக்கு 3 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

வாய்மையே வெல்லும்: கவுதம் அதானி – எக்ஸ் தளத்தில் கவுதம் அதானி வெளியிட்டுள்ள பதிவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம், உண்மை வென்றுவிட்டது. வாய்மையே வெல்லும். எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துக்கான எங்கள் பங்களிப்பு தொடரும். ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.