;
Athirady Tamil News

அரச ஊழியர்களின் இடமாற்றங்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

அரசாங்க துறைகளைச் சேர்ந்தவர்களின் வருடாந்த இடமாற்றங்களின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அரசாங்க பொதுச் சேவை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களிடம் அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர், எழுத்துமூலம் இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீடுகள்
அரச சேவை ஆணைக்குழுவுக்கு, 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பில் மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீடுகள் தொடர்பில், ஆணைக்குழுவின் தீர்மானங்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வருடாந்த இடமாற்றத்தின் கீழ் வழங்கப்பட்ட சில இடமாற்ற சுழற்சிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், அதனால் சம்பந்தப்பட்ட இடமாற்ற சுழற்சிகளில் உள்ள ஏனைய உத்தியோகத்தர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுச் சேவைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

வருடாந்த இடமாற்றங்கள்
வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பாக பொதுச் சேவை ஆணைக்குழுவின் தீர்மானங்களில் அதிருப்தி அடையும் உத்தியோகத்தர்கள், நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தில் தமது முறையீடுகளை சமர்ப்பிக்கலாம் என பொதுச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பான நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முடிவுகள் நிலுவையில் உள்ளதால், உரிய இடமாற்றங்கள் அப்படியே தொடர வேண்டும் என்று பொதுச் சேவை ஆணைக்குழு, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.

இதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற உத்தரவுகள் தொடர்பில் பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்க வேண்டாம் எனவும், முறைப்படி இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளை விடுவிக்குமாறும் பொதுச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.