;
Athirady Tamil News

அமெரிக்காவின் ஆதரவு… இஸ்ரேலுக்கு திடீர் மிரட்டல் விடுத்த ஜனாதிபதி பைடன்

0

காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமரை கட்டாயப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதரவை இழக்க நேரிடும்
பொதுமக்களையும் தொண்டு நிறுவன ஊழியர்களையும் பாதுகாக்க தவறினால் அமெரிக்காவின் ஆதரவையும் இழக்க நேரிடும் என்றும் ஜோ பைடன் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

சர்வதேச உணவு தொண்டு நிறுவனமான வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சனின் ஏழு ஊழியர்கள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதில், ஹமாஸ் படைகளுக்கு எதிரானதாக கூறப்படும் இஸ்ரேலின் போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக அமெரிக்காவின் கடும் கண்டனத்தை ஜோ பைடன் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த தொலைபேசி அழைப்பில், தொண்டு நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பு, அப்பாவி மக்களுக்கு ஏற்படுத்தப்படும் மனிதாபிமான நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் நடவடிக்கை முன்னெடுக்க ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் படைகளுடன் ஒப்பந்தம்
இஸ்ரேலின் அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்தே அமெரிக்காவின் முடிவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடி போர் நிறுத்தம் அவசியம் என குறிப்பிட்டுள்ள ஜோ பைடன், கால தாமதமின்றி ஹமாஸ் படைகளுடன் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க இஸ்ரேலை கட்டாயப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக முதல் முறையாக ஜோ பைடன் கடுமையாக நடந்துகொண்டுள்ளார் என்றே கூறப்படுகிறது. இஸ்ரேலின் கிட்டத்தட்ட ஆறு மாத கால தாக்குதலுக்கு அமெரிக்கா முக்கியமான இராணுவ உதவி மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்கி வருகிறது.

சமீபத்தில் தான் தலா 907 கிலோ எடை கொண்ட 1,800 எம்.கே-84 ரக வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதே நாளில் தான் காஸா மக்களுக்கு உணவளித்து வந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.