அதிகாரிகள் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு டிக்கெட் இல்லாமல் இரண்டுமுறை விமானத்தில் ஏறிய நபர்
ஜேர்மனியின் பரபரப்பான விமான நிலையம் ஒன்றில், அதிகாரிகள் கண்களில் சிக்காமல் விமானம் ஒன்றில் ஏறியுள்ளார் வெளிநாட்டவர் ஒருவர்.
அதுவும் ஒரு முறை அல்ல, இரண்டு அடுத்தடுத்த நாட்கள் அவர் அவ்வாறு அதிகாரிகள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, டிக்கெட்டும் இல்லாமல் விமானத்தில் ஏறியுள்ளார்.
டிக்கெட் இல்லாமல் இரண்டுமுறை விமானத்தில் ஏறிய நபர்
ஜேர்மனியின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான முனிச் விமான நிலையத்தில், நோர்வே நாட்டவரான 39 வயது நபர் ஒருவர் டிக்கெட்டும் இல்லாமல், அதிகாரிகள் கண்ணிலும் சிக்காமல் லூஃப்தான்சா விமானம் ஒன்றில் ஏறியுள்ளார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருக்கை எதுவும் காலியாக இல்லாததால் அவர் பிடிபட்டுவிட்டார்.
அவர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட, அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்துவிட்டு, அவரை விட்டுவிட்டார்கள் பொலிசார்.
இரண்டாவது முறை
அடுத்த நாள் மீண்டும் எப்படியோ விமான நிலைய அதிகாரிகள் கண்ணில் படாமல் ஸ்வீடன் செல்லும் லுஃப்தான்சா விமானம் ஒன்றில் ஏறியுள்ளார் அவர்.
இம்முறை விமானத்தில் காலி இருக்கைகள் இருக்கவே, அவரை யாரும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
ஸ்வீடன் சென்று இறங்கிய அவர் மீண்டும் ஜேர்மனிக்குத் திரும்ப முயற்சிக்க, அப்போதுதான் அதிகாரிகள் அவரைக் கவனித்துள்ளார்கள்.
உடனடியாக அவர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட, அவரால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லையென்றாலும், அவர் எப்படி தானியங்கி அனுமதி அமைப்பைத் தாண்டி, அதிகாரிகள் கண்களிலும் படாமல் விமானத்தில் ஏறினார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.