;
Athirady Tamil News

இறைத்தூதர் குறித்து அவதூறு பரப்பிய பாப் பாடகருக்கு மரண தண்டனை!

0

ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஒருவர் இறைத்தூதர் குறித்து அவதூறு பரப்பியதற்காக அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

ஈரானை சேர்ந்த பிரபல பாப் இசை பாடகரான டட்டலூ என்றழைக்கப்படும் அமிர் ஹொசைன் மக்சொதலூ (வயது 37), ராப் மற்றும் பாப் இசைகளின் மூலமாக மக்களிடையே பல கருத்துக்களை புகுத்தி வந்தார். இருப்பினும், அவர் அவ்வப்போது பல சர்ச்சைகளிலும் சிக்கி வந்துள்ளார்.

இந்நிலையில், ஈரானில் விபச்சாரத்தை பரப்பியதற்காகவும், அந்நாட்டின் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததற்காகவும் மற்றும் அவதூறான காட்சிகளை பதிவேற்றம் செய்ததற்காகவும் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் துருக்கி நாட்டில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தார். ஆனால், கடந்த 2023 ஆம் ஆண்டு துருக்கி நாட்டு அதிகாரிகளால் ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டர். அப்போது கைது செய்யப்பட்ட அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இறைத்தூதர் முகமது நபி குறித்து அவதூறு பரப்பியதற்காக அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாதென்று அரசு வழக்கறிஞர் சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கடந்த ஜன.20 அன்று அமிர் ஹொசைன் மக்சொத்லூவிற்கு மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பு இறுதியானது இல்லை அவர் மீண்டும் மேல் முறையீடு செய்யமுடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரானின் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரயிசியுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் தொலைக்காட்சி நேரலை ஒன்றில் கலந்துக்கொண்டார்.

மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரானின் அணு ஆயுத முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து டட்டலூ தனது பாடல் ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.