யாழ்ப்பாண பல்கலைக்கழக மாண்வர்கள் தமது சக மாணவர்களுக்கான சிங்கள மாணவர்களுக்கு தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பிலான உண்மைகளை எடுத்து கூற வேண்டும்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாண்வர்கள் தமது சக மாணவர்களுக்கான சிங்கள மாணவர்களுக்கு தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பிலான உண்மைகளை எடுத்து கூற வேண்டும். அதனூடாக விகாரை தொடர்பிலான உண்மை சிங்கள மக்களை சென்றடையும் என தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்து காணிகளின் உரிமையாளர்களில் ஒருவரான பாலசுப்பிரமணியம் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழர் போராட்ட வரலாற்றில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பு பெரியது. பல மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள் மாணவர்கள். எமது காணிகளை மீட்டு தர மாணவர்களும் எம்முடன் இணைந்து போராடி எமது காணிகளை மீட்டு தர வேண்டும்.
பல்கலைக்கழக கல்லாசனம் பிரச்சனை என்பதனையும் தாண்டி , மாணவர்கள் சமூகத்திற்காக போராட முன்வர வேண்டும்.
அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நாம் சந்தித்து பேசினோம்.
அப்போது அவர்கள் நாம் மற்ற அரசியல்வாதிகள் போல் அல்ல. உங்களுக்காக உங்கள் நியாமான போராட்டத்திற்கு ஆதரவாக இருப்போம். நாம் வென்றால் உங்கள் காணிகளை மீட்டு தர நடவடிக்கை எடுப்போம் என எமக்கு உறுதி அளித்தார்கள்.
தற்போது அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களை சந்தித்து கதைத்த போது காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்க்கை எடுப்போம் என உறுதி அளித்தனர்.
எனவே நாம் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் முன்னெடுக்க உள்ள போராட்டத்திற்கு ஆதரவாக எமக்காக போராட முன் வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
அதேவேளை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பல தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் கதைத்த போது , அவருக்கு ஆதரவாக யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் உள்ளிட்டவர்கள் கருத்து கூறாமல் மௌனம் காத்தமை எமக்கு வேதனையளித்தது என தெரிவித்தார்.