ஜார்க்கண்ட்டில் வயதான அம்மாவை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு கும்பமேளாவுக்கு சென்ற மகன்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராம்கர் மாவட்டத்தில், மனைவி, குழந்தைகளுடன் மகா கும்பமேளாவுக்கு செல்லும் ஆசையில் வீட்டில் அடைத்து வைத்துவிட்டு சென்ற வயோதிகமான தாயாரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீஸார் மீட்டனர்.
இதுகுறித்து ராம் கர் காவல் துறை அதிகாரி பரமேஷ்வர் பிரசாத் கூறியதாவது: சுபாஷ் நகர் காலனியில் உள்ள மத்திய கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான குடியிருப்பில் 65 வயதான சாந்தினி தேவியின் வீட்டுக்குள் இருந்து உதவி கோரி அழுகுரல் கேட்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டுக்குள் இருந்த மூதாட்டியான சாந்தினி தேவியை மீட்டனர். அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டதால் முதலில் உணவு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மூதாட்டியின் மகன் அகிலேஷ் குமார், தனது மனைவி, குழந்தை, மாமியாருடன் சேர்ந்து மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக வயதான தாயை வீட்டில் வைத்து பூட்டிச் சென்றது தெரியவந்தது. இவ்வாறு காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், “ தாயார் சுகவீனமாக நடக்க இயலாமல் இருப்பதால் அவருக்கு தேவையான தண்ணீர், உணவுகளை அவரது மகன் அகிலேஷ் தயார்செய்து வைத்துவிட்டு கும்பமேளாவுக்கு குடும்பத்துடன் சென்றதாக தெரிவித்துள்ளார்” என்றார்.