தனது தந்தையைத் தாக்கியதால் இஸ்ரேல் பிரதமரின் மகன் நாடு கடத்தப்பட்டாரா?
இஸ்ரேல் பிரதமரின் மகன் தனது தந்தையைத் தாக்கியதினால் நாடு கடத்தப்பட்டார் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் நாடாளுமன்றமான நெஸடில், நிதிநிலைக் குறித்த விவாதத்தின் போது பேசிய அந்நாட்டு எதிர்கட்சிகளில் ஒன்றான டெமோகிரெட்ஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமா லாஸிமி, பிரதமர் நெதன்யாகுவின் மனைவியின் அமெரிக்க பயணம் மற்றும் அவரது மகனுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஆகியவற்றின் செலவுகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, சாரா நெதன்யாகுவின் 2 மாத வெளி நாட்டு பயணங்களுக்கும், அவர்களது மகனது பாதுகாப்பிற்கும் செலவளிக்கப்படும் பணம் யார் முதலீடு செய்கின்றார்கள் என்றும் எந்த பட்ஜெட்டின் அடிப்படையில் அவை செலவு செய்யப்படுகிறது என்றும் அவர் தொடர் கேள்விகளை அடுக்கினார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் நெதன்யாகுவின் மகன் யாயிர் நெதன்யாகுவின் பாதுகாப்பிற்காக ஓராண்டிற்கு 7 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்படுவதாக, 2024 ஆம் ஆண்டு வெளியான செய்தியை சுட்டிக்காட்டி பேசிய அவர் இந்தத் தொகை இன்னும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், பிரதமர் நெதன்யாகுவின் மகன் அவரைத் தாக்கி, பிரதமரது அதிகாரத்தை சேதப்படுத்தியதால் வெளிநாட்டில் இருக்க வேண்டியிருப்பதாகக் கூறி அவையோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். இதற்கு, ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தபோது, யாயிர் நெதன்யாகு நாடு கடத்தப்பட்டதாக லாஸிமி பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமரின் லிகுட் கட்சியின் பிரதிநிதியல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நாமா லாஸிமியின் இந்த கருத்து முற்றிலும் பொய்யானது என்றும் அவர் மீதும் இந்த பொய்யை பரப்புவோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் நெதன்யாகுவின் மனைவி மற்றும் அவர்களது மற்றொரு மகனான அவ்னர் ஆகியோருக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு ஆணையமான ஷின் பெட் பாதுகாப்பு அளித்து வருகின்றது. காஸாவுடனான போரில் ஏராளமான இஸ்ரேலியர்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நெதன்யாகு தனது மகனை வெளி நாட்டில் தங்க வைத்திருப்பது அந்நாட்டு மக்களிடையே மிகுந்த விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.