;
Athirady Tamil News

வவுனியா இரட்டை கொலைசந்தேக நபர்களுக்கு பிணை

0

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி மரணமடைந்திருந்தனர்.

6 பேர் வவுனியா பொலிஸாரால் கைது
கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததுடன் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் கடந்த மார்ச் மாதம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சந்தேக நபர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் பிணை கோரி பிணை மனுவை சமர்ப்பித்திருந்தார்.

அதற்கு ஆட்சேபனை வெளியிட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தினர் பிணை வழங்குவதற்க்கு மறுப்புத் தெரிவித்து விளக்கமறியலை நீடிக்குமாறு வாதங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசேட காரணங்கள் முன்வைக்கப்படாமையால் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதாமையால் குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைவாக இன்று (28) குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முதலாம், மூன்றாம், நான்காம், ஆறாம், ஒம்பதாம் இலக்க சந்தேக நபர்கள் 5 பேருக்கும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.