;
Athirady Tamil News

மத்திய பிரதேச கொடூரம்: பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்ற நாய்

0

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில், உள்ள அரசு மருத்துவமனையின் கழிப்பறையிலிருந்து, தெருநாய் பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்றது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மோவ் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையிலிருந்து, பிறந்த பச்சிளம் குழந்தையின் உடலை, நாய் கவ்விச் சென்றதைப் பார்த்த மருத்துவமனை பாதுகாவலர், விரட்டிச் சென்று, குழந்தையின் உடலை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.

அந்தக் குழந்தையின் உடலில் பாதியை நாய் தின்றுவிட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக, மருத்துவமனை அதிகாரிகளும், காவல்துறையினரும், என்ன நடந்திருக்கும் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மருத்துவமனையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின்படி, நாய், குழந்தையின் உடலை கவ்விச் சென்றது நள்ளிரவு 1.30 மணியிலிருந்து 2 மணிக்குள் நடந்துள்ளது. இதற்கு முன்புதான், ஒரு இளம்பெண், அங்கிருந்த கழிப்பறைக்குள் சென்று வந்திருப்பதும் பதிவாகியிருக்கிறது.

அந்தப் பெண் யார் என்பது குறித்து மருத்துவமனையில் விசாரித்தபோது, 17 வயதான அந்த பெண், உடல்நிலை பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத்தான், கழிப்பறையில் பிரசவம் ஆகியிருக்கக் கூடும் என்றும், அந்தக் குழந்தையை அவர் கழிப்பறையிலேயே விட்டுவிட்டு வந்திருக்க வேண்டும் என்றும், அதனை நாய் கவ்விச் சென்றிருக்கலாம் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிப்பறைக்குச் சென்று வந்த அந்தப் பெண், சில விநாடிகளில், ஒரு நபருடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

இது குறித்து விசாரணை அதிகாரிகள் கூறுகையில், குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்திருக்கலாம் என்றும், குழந்தையின் உடல் கூறாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பிறகே, குழந்தை இறந்து பிறந்ததா அல்லது கொல்லப்பட்டதா என்பது குறித்து தெரிய வரும் என கூறியிருக்கிறார்கள்.

இந்த மருத்துவமனைக்கு மூன்று நுழைவாயில்கள் இருப்பதாகவும், இரவிலும் இவை திறந்தே இருப்பதால், தெரு நாய்கள் மருத்துவமனைக்குள் வந்து செல்வது வழக்கம் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மருத்துவமனை வாயில்கள் இரவு நேரத்தில் மூடியிருக்கும்படி, மருத்துவமனை டீன் அறிவுறுத்தியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.