அமெரிக்கா – ஈரான் இடையே அடுத்தவாரம் பேச்சுவார்த்தை: டிரம்ப்

ஈரானுடன் அடுத்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜூன் 25) தெரிவித்தார்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரினால், தடைபட்டிருந்த பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்படுவதாகவும், இதில் ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் நாட்டோ உச்சிமாநாட்டில் செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது, ஈரான் உடனான பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் பேசியதாவது,
”உங்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அடுத்த வாரம் நாங்கள் அவர்களுடன் (ஈரான்) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். நாங்கள் இதில் ஒப்பந்தங்களையும் கையெழுத்திடலாம். அது குறித்து முழுமையாகத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஈரானுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதில் குறிப்பாக எந்தவொரு ஆர்வமும் இல்லை என்றும் ஈரானின் அணிசக்தி திட்டங்களை அமெரிக்கா சீரழித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அடுத்த வாரத்துக்கான பேச்சுவார்த்தைக்கு ஈரான் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. எனினும், அமெரிக்க மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப், இரு நாடுகளுக்கு இடையே நேரடி மற்றும் மறைமுக தொடர்பில் இருந்து இதற்கு உதவுவார் எனத் தெரிகிறது.
ஈரான் அணு ஆயுத திட்டங்களைக் கைவிடவில்லை என்றாலும், தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் அமைதிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதாகவும் டிரம்ப் பேசியிருந்தார்.
ஈரான் – இஸ்ரேல் இடையே இரு வாரங்களாக தாக்குதல்கள் தொடர்ந்து வந்த நிலையில், போரின் 12ஆவது நாளன்று இரு நாடுகளும் போரைக் கைவிடுவதாகவும் இதற்கு தான் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் நேற்று முன்தினம் (ஜூன் 24) தெரிவித்திருந்தார்.
இதற்கு மத்தியில் ஈரானின் சில பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியது. இதற்கு பதில் தாக்குதலும் கொடுக்கப்பட்டது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்திக்கொண்டதற்கு டிரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
மேலும், போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மதிப்பு கொடுத்தால், அதனை ஈரானும் மதிக்கும் என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்திருந்தார்.