விமான விபத்து: ரஷியாவில் 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிப்பு!
ரஷியாவில் விமானம் விபத்துக்குள்ளாகி 48 பேர் பலியானதால், அந்நாட்டின் கிழக்கு மாகாணங்களில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில், டிண்டா விமான நிலையத்தை நோக்கி 5 குழந்தைகள் உள்பட 42 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்த, அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் (ஜூலை 24) அங்குள்ள வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் பயணித்த 48 பேரும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விபத்தில் பலியானோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அமுர் ஒப்லாஸ்ட் மற்றும் கபரோவ்ஸ்க் ஆகிய மாகாணங்களில் நேற்று (ஜூலை 25) முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்பட்டு, அந்நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், பலியான சிலர் கப்ரோவ்ஸ்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அம்மாகாண ஆளுநர் டிமிட்ரி டெமேஷின், பலியானோர் குடும்பங்களுக்கு சுமார் ஒரு மில்லியன் ரூபில்ஸ் (ரூ.11 லட்சம்) இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் பலியான பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் குடும்பத்தினருக்கான பயணச் செலவை, அரசே ஏற்கும் என ரஷியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்ட்ரே நிகிடின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.