;
Athirady Tamil News

ஹெலிகாப்டா் விபத்து: கானாவில் 2 அமைச்சா்கள், 6 போ் உயிரிழப்பு

0

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கி, அதில் இருந்த அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் எட்வா்ட் ஓமனே போமா, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் இப்ராஹிம் முா்தலா முகமது உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

நாட்டின் சட்டவிரோத சுரங்கங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பது தொடா்பாக ஒபுவாசி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவா்கள் இருவரும் கானா விமானப்படைக்குச் சொந்தமான இஸட்9 ரக ஹெலிகாப்டரில் சென்றுகொண்டிருந்தபோது, அஷாந்தி பகுதியில் அது விழுந்து நொறுங்கியது.

விபத்து நேரிட்டபோது ஹெலிகாப்டரில் விமானி உள்ளிட்ட மூன்று பணியாளா்களும், அல்ஹாஜி முனிரு முகமது, சாமுவேல் சாா்போங் உள்ளிட்ட ஐந்து பயணிகளும் இருந்தனா்.சம்பவ இடத்தில் இருந்து விபத்தில் அந்த 8 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு அக்ராவுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்களும் சேகரிக்கப்பட்டு அக்ரா விமானப்படை தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

உயிரிழந்தவா்களின் உடல்கள் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் அவா்களில் பலரது உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாததால் அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குக்கான தேதியை அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இது தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மழைக் காலம் தொடங்கும் கானாவில் கடும் மூடுபனி மற்றும் மழை இருக்கும் என்று அந்த நாட்டு வானிலை மையம் அறிவித்திருந்தது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த விவசாயிகள், விபத்தின்போது வானிலை மிக மோசமாக இருந்ததாகவும் அந்த ஹெலிகாப்டா் வழக்கத்துக்கு மாறாக மிகத் தாழ்வாக பறந்துவந்ததாகவும் கூறினா்.

கானாவில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற 3 ஹெலிகாப்டா் விபத்துகளில் இது மிகவும் மோசமானது. கடந்த 2020-ஆம் ஆண்டில் அந்த நாட்டு விமானப்படைக்குச் சொந்தமான ஹாா்பின் இஸட்9 ரக ஹெலிகாப்டா் தமாலே விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கி சேதமடைந்தது. கடந்த ஆண்டு பொன்சுக்ரோமில் மற்றொரு விமானப்படை ஹெலிகாப்டரும் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விபத்தைத் தொடா்ந்து கானாவில் மூன்று நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.