;
Athirady Tamil News

கரூரில் பலியானோர் குடும்பத்தினருக்கு காணொலிவழி விஜய் ஆறுதல்!

0

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு காணொலிவழியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செவ்வாய்க்கிழமை காலை ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27 ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும் 110 பேர் படுகாயம் அடைந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 106 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தவெக மாவட்ட நிர்வாகிகள் பலியானவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கரூர் அடுத்த ஏமூர் புதூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அருக்காணியின் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை காலை சென்ற தவெக நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்தனர். பின்னர், தவெக நிர்வாகியின் செல்போனுக்கு தொடர்புகொண்ட விஜய், காணொலிவழியாக அருக்காணியின் மருமகன் சக்திவேலிடம் பேசினார்.

அப்போது, ”உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட ஒருவரின் இழப்பு என் மனதை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. இப்போது சட்ட திட்டங்கள் எனக்கு எதிராக இருப்பதால் உங்களை நேரில் வந்து சந்திக்க முடியவில்லை. விரைவில் உங்களை வந்து சந்திப்பேன், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து எப்போதும் உங்களுக்கு உதவி செய்பவனாக இருப்பேன்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

இதேபோல், கரூர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த நெரிசலில் பலியான தனுஷ் குமாரின் தாய் உமா மகேஸ்வரி மற்றும் அவரது சகோதரி ஹர்ஷினி ஆகியோரிடமும் காணொலிவழியாக விஜய் பேசியுள்ளார்.

மேலும், பிரசாரக் கூட்டத்தில் பலியான 25 -க்கும் மேற்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பேசிய விஜய், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.