“தேசவழமைச் சட்டத்தில் ஆதனங்கள் “எனும் விடயப்பரப்பிலான கருத்தமர்வு
“தேசவழமைச் சட்டத்தில் ஆதனங்கள் “எனும் விடயப்பரப்பிலான கருத்தமர்வு யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்றைய தினம் (10.10.2025) காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், தேச வழமைச் சட்டம் தொடர்பாக எல்லோரும் அறிந்திருந்தாலும் இது தொடர்பான முழுமையான அறிவை பெற்றிருத்தல் அவசியமானதொன்றாக காணப்படுவதாகவும் உத்தியோகத்தர்கள் என்ற ரீதியில் மட்டுமில்லாமல் வடக்கு மாகாணத்தின் சாதாரண பொதுமக்கள் என்ற ரீதியில் எமது சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த சட்டம் தொடர்பில் அறிந்திருக்க வேண்டிய கடப்பாடு உடையவர்களாக நாம் காணப்படுவதாகவும், இந்தச் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தமை ஒர் அரிய வாய்ப்பு என்று குறிப்பிட்டத்துடன் இதனை ஏற்பாடு செய்த சட்டத்தரணிகள் சங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்தார். மேலும் எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் பொதுச் சட்டங்களுக்கு மேலதிகமாக தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், இஸ்லாமியச் சட்டம் என்ற 3 சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன இவற்றுள் வட மாகாண தமிழ் மக்களுக்கென தேச வழமைச் சட்ட நடைமுறைப்படுத்தப்படுகின்றது, இந்தச் சட்டம் உரிமை மற்றும் பெண்களின் சொத்து தொடர்பான விடயங்கள் பற்றி குறிப்பிடுவதாகவும், இவ்வாறான சட்டம் தொடர்பான பல்பரிமான சட்ட ஏற்பாடுகளை எமது அலுவலகங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற நோக்கில் இச் செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இக் கருத்தமர்வில் கொழும்பு சட்ட வரைஞர் திணைக்களத்தினைச் சேர்ந்த மேலதிக சட்ட வரைஞர் எஸ். செல்வகுணபாலன் வளவாளராக கலந்து கொண்டு தேசவழமைச் சட்டம் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.
இக் கருத்தமர்வில் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தினுடைய தலைவர் ஜெ.ஜெயரூபன், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், வடக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகம் பிரபாகரன், பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பருத்தித்துறை காணி மற்றும் மாவட்ட பதிவாளர், மேலதிக மாவட்டப் பதிவாளர், பதிவாளர் நாயக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக காணிக்கிளை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இச் செயலமர்வில் கலந்துகொண்டனர்.









