ஜனநாயக சீர்திருத்த சாசனம்: வங்கதேச கட்சிகள் கையொப்பம்
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்குப் பிறகு கொண்டுவரப்படவிருக்கும் ஜனநாயக சீர்திருத்தங்களை உறுதி செய்வதற்கான சாசனத்தில் முக்கிய கட்சிகள் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டன.
கடந்த ஆண்டு நடைபெற்ற தீவிர மாணவர் போராட்டத்துக்குப் பிறகு அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து இந்த சீர்திருத்த சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது.
டாக்காவில் நடைபெற்ற கையொப்பமிடல் நிகழ்ச்சியில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறியதாவது:
நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது முற்றிலும் மோசமான ஒரு ஜனநாயகக் கட்டமைப்பைத்தான் பெற்றேன். அதை சீர்திருத்தும் வகையில் இந்த சாசனம் அமைந்துள்ளது. புதியதொரு வங்கதேசத்தை உருவாக்க இந்த சாசனம் உதவும். மீண்டும் சர்வாதிகார ஆட்சி வராமல் தடுக்க இதுபோன்ற சீர்திருத்தங்கள் தேவை என்றார் அவர்.
இந்த சாசனத்தில் முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி மற்றும் இஸ்லாமிய கட்சியான ஜமாஅத்}இ}இஸ்லாமி ஆகியவை கையொப்பமிட்டாலும், ஹசீனாவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மாணவர்களால் தொடங்கப்பட்ட தேசிய குடிமக்கள் கட்சி விழாவை புறக்கணித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.