;
Athirady Tamil News

அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1.77 லட்சம்! வரி வருவாயை பகிர்ந்து கொடுக்க டிரம்ப் திட்டம்!!

0

அமெரிக்காவில் வாழும் அதிக வருவாய் உள்ளவர்களைத் தவிர்த்து, மற்ற அனைவருக்கும் தலா 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

பல்வேறு உலக நாடுகளுக்கும் அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி விதிப்புகள் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் வரி வருவாயைப் பகிர்ந்து, அமெரிக்க மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

விமர்சனங்களுக்கு உள்ளானாலும், தன்னால் அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரி விதிப்பு முறையால், உலக நாடுகளிலிருந்து வந்த வரி வருவாய் அதிகரித்து பணவீக்கமே இல்லாத நாடாக அமெரிக்கா மாறியிருப்பதாகவும், உலகின் பணக்கார நாடாகவும் அமெரிக்கா உருவாகியிருப்பதாகவும் டிரம்ப் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி விதிப்பு முறையை விமர்சித்தவர்களை முட்டாள்கள் என்று கூறியிருக்கும் டிரம்ப், அமெரிக்காவுக்கு பல கோடிக் கணக்கில் வரி வருவாய் அதிகரித்திருப்பதாகவும், நாட்டின் கடனில் பல கோடி ரூபாயை திரும்ப செலுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருபக்கம் பரஸ்பர வரி விதிப்பு மட்டுமல்லாமல், வணிக ஒப்பந்தங்கள் மூலமும் அமெரிக்கா, முதலீடுகளில் சாதனை படைத்து வருவதாகவும், பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருவதாகவும் டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

டிரம்ப் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில், நாங்கள் டிரில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டி வருகிறோம், விரைவில் அமெரிக்காவின் மிகப் பெரிய கடனான $37 டிரில்லியனை செலுத்தத் தொடங்குவோம் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஊடகம் ஒன்றில் அளித்த நேர்காணலின்போது, அமெரிக்க வரி வருவாயில் ஆயிரம் டாலர் முதல் இரண்டாயிரம் டாலர் வரை அமெரிக்கர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும், வரி வருவாய் ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிமாக இருக்கும் என்று கணிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.