;
Athirady Tamil News

தாதியர் பணிப்புறக்கணிப்பு

0

வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்பட்டல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்தல் என்ற வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவுக்கு எதிராக, குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.

வேலைநிறுத்தம் நாளைய தினம் புதன்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பித்து, நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு முடிவடையவுள்ளது.

இது தொடர்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,

வடக்கு மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாண சபைகளிலோ அல்லது மத்திய அரசாங்கத்தின் வைத்தியசாலைகளிலோ/சுகாதார நிறுவனங்களிலோ இத்தகைய நடைமுறை அமுலில் இல்லாததால், வடக்கு மாகாணத்தில் மாத்திரம் இது தன்னிச்சையாக அமுல்படுத்தப்படுவது பாரதூரமான பிரச்சினையாகும்.

தாதியர்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடுகின்றனர். சாதாரண கடமை நேரங்கள், மேலதிக கடமை நேரங்கள், வாராந்த ஓய்வு நாட்களில் கடமைகள், அரசாங்க பொது விடுமுறை நாட்களில் கடமைகள் போன்ற ஒன்றுக்கொன்று வேறுபட்ட கொடுப்பனவுகளுக்கு அடிப்படையாக அமையும் கடமைகளை அவர்கள் செய்கின்றனர்.

தற்போதுள்ள சேவைத் தேவைகள் காரணமாக கிட்டத்தட்ட ஒவ்வொரு தாதியரும் இந்தக் கடமைகளில் ஈடுபட வேண்டியுள்ளது.அத்தகைய சிக்கலான சூழ்நிலைகளில், கொடுப்பனவுகளுக்கான தெளிவான உறுதிப்படுத்தலுக்காக, சாதாரண கடமைகளுக்கு மேலதிகமாகச் செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு அடிப்படையாக அமையும் ஏனைய ஒவ்வொரு கடமை நேரங்களுக்கும் தனித்தனி வருகைப்பதிவேடுகளை பேணுவதற்கு சுற்றறிக்கையின் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிலைமை இவ்வாறிருக்க, அனைத்து ஊழியர்களும் ஒரே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவதால், பல்வேறு கடமை நிலைகளை இலகுவாக அடையாளம் காண்பது ஒரு பாரிய பிரச்சினை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இதனால், சேவைத் தேவையின் பேரில் செய்யப்படும் மேலதிக கடமைகளுக்கான உரிய கொடுப்பனவுகளைக்கூட இழக்கும் அபாயம் உருவாகலாம் என்பதும் தெளிவாகிறது.

அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக, எதிர்காலத்தில் உயிரியல் அளவீட்டு முறைகள் அமுல்படுத்தப்படும்போது, அதற்கேற்ப தற்போதுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொள்ளலாம் என்று தெரிவிப்பதோடு, அதுவரை இடைக்கால நடவடிக்கையாக, வெறுமனே கணக்காய்வு அதிகாரிகளுக்கு வசதியாக அமையும், ஆனால் ஏனைய அதிகாரிகளுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தும் இந்த யோசனையை அமுல்படுத்துவதை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம் – என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.