‘தற்கொலை தாக்குதல் எனப்படுவது…’ – டெல்லி குண்டு வெடிப்பு குற்றவாளி உமர் நபியின் பழைய வீடியோ வெளியானது!
புதுடெல்லி: “தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான உயிர்த் தியாக நடவடிக்கை.” என டெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய மருத்துவர் உமர் நபி பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த 10-ம் தேதி டெல்லி – செங்கோட்டை பகுதியில் உமர் நபி இந்த தாக்குதலை நடத்தினார். அதற்கு முன்பாக இந்த வீடியோவை அவர் பதிவு செய்திருக்கலாம் எனத் தகவல். இந்த வீடியோவை ஆங்கில ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
“தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலில் இந்தப் புரிதலே தவறு. ஏனெனில், இது ஒரு வகையான உயிர்த் தியாக நடவடிக்கை. இப்படித்தான் இது இஸ்லாமியத்தில் அறையப்படுகிறது. ஒரு நபர், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிச்சயமாக இறக்கப் போகிறார் என்பது இது. ஒரு நபர் இறக்கப் போகிறார் என்ற ஊகதுக்கு எதிரானது இது.” என்று அந்த வீடியோவில் உமர் பேசியுள்ளார்.
காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்களுடன் ஓட்டிச் சென்று டெல்லி செங்கோட்டை பகுதியில் வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இதில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கான திட்டமிடலை அக். 2 -ம் தேதி தொடங்கி அக்டோபர் 28-ம் தேதி இறுதிவரை செய்துள்ளார் உமர். இந்த நிலையில் தற்கொலை தாக்குதல் குறித்து அவர் பேசிய வீடியோ இப்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ மூலம் மற்ற இளைஞர்களை தீவிரவாதம் நோக்கி இழுக்க உமர் பயன்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.