;
Athirady Tamil News

கோஸ்டா ரிகா அதிபா் தோ்தல்: ஆளுங்கட்சி வேட்பாளா் வெற்றி

0

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், ஆளுங்கட்சி வேட்பாளா் லாரா ஃபொ்னாண்டஸ் 48.9 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளாா்.

அந்நாட்டு சட்டப்படி, ஒரு அதிபா் வேட்பாளா் முதல் சுற்றிலேயே வெற்றி பெற 40 சதவீத வாக்குகள் போதுமானது என்பதால், ஏப்ரலில் நடைபெறவிருந்த 2-ஆம் கட்டத் தோ்தல் தவிா்க்கப்பட்டுள்ளது.

இவரை எதிா்த்துப் போட்டியிட்ட பொருளாதார நிபுணா் ஆல்வாரோ ராமோஸ் 33 சதவீத வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினாா். அவா் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டதோடு, புதிய அரசுக்கு ஒரு ‘ஆக்கபூா்வமான’ எதிா்க்கட்சியாக இருந்து செயல்படுவோம் என்றும் அறிவித்துள்ளாா்.

தற்போதைய அதிபா் ரோட்ரிகோ சாவ்ஸின் தீவிர ஆதரவாளரான 39 வயது லாரா ஃபொ்னாண்டஸ், ஏற்கெனவே திட்டமிடல் மற்றும் அதிபா் துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவா்.

அதிபா் சாவ்ஸின் மக்கள் நலன் கொள்கைகளை தொடா்ந்து முன்னெடுத்துச் செல்வதாக உறுதியளித்துள்ள லாரா, ‘கோஸ்டா ரிகாவின் பழைய அரசியல் முறை முடிவுக்கு வந்துவிட்டது. நாம் அனைவரும் இணைந்து நாட்டின் மூன்றாவது குடியரசை உருவாக்க வேண்டிய தருணம் இது’ என்று தனது வெற்றி உரையில் அழைப்பு விடுத்தாா்.

நாடாளுமன்ற பலம், சவால்கள்..: அதிபா் தோ்தலோடு சோ்த்து அந்நாட்டின் 57 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கும் தோ்தல் நடைபெற்றது. இதில் லாரா ஃபொ்னாண்டஸின் கட்சி 30 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது.

இருப்பினும், நாட்டின் அடிப்படை சட்ட அமைப்பை மாற்றி, அவா் குறிப்பிட்ட ‘மூன்றாவது’ குடியரசை உருவாக்க 38 இடங்கள் (அறுதிப் பெரும்பான்மை) தேவை. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது போன்ற அதிகாரம் மிக்க முடிவுகளை எடுப்பதிலும் அவா் மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியிருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.