காணாமற்போன டொலர் விவகாரத்தில் பதில் தேடும் அரசாங்க நிதி பற்றிய குழு
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமற்போனதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (23) மீண்டும் கூடவுள்ளது. இக்கூட்டம், குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்குமாறு திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சும் மத்திய வங்கியும் தனித்தனியாக அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.
நிதி அமைச்சின் அறிக்கை ஒரு வாரத்திற்கு முன்னரும், மத்திய வங்கியின் அறிக்கை சில நாட்களுக்கு முன்னரும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில், இரண்டு நிறுவனங்களின் அறிக்கைகளிலும் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து உண்மை நிலையை வெளிக்கொணரும் நோக்கில் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.