78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய (04.02.2026) காலை 07.30 மணிக்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி – தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்றைய அணிவகுப்பில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவித்து மர நடுகை மற்றும் சிரமதானம் போன்ற நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ராசிக், பொலிஸ் கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
